Enable Javscript for better performance
தில்லி மெட்ரோ ரயில் தலைவர் மங்கு சிங்குக்கு எதிராக பிடியாணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவ- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மெட்ரோ ரயில் தலைவர் மங்கு சிங்குக்கு எதிராக பிடியாணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

    By DIN  |   Published on : 04th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழை நீர் சேகரிப்புகளை அமைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் ஆஜராகாததையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் மங்கு சிங்குக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்தது.
    இதுதொடர்பான வழக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி விசாரணை நடைபெற்றபோது, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சில பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு ஏன் அமைக்கப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஜனவரி 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று   தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
    இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (பொறுப்பு) தலைவரும் நீதிபதியுமான யு.டி. சால்வி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎம்ஆர்சி சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
    இதையடுத்து,  தீர்ப்பாய அமர்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்: 
    டிஎம்ஆர்சியின் சார்பில் எந்த ஒரு அதிகாரியும் ஆஜராகவில்லை. டிஎம்ஆர்சி தலைவர் மங்கு சிங்கிற்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது. 
    மங்கு சிங்கை கைது செய்ய செல்லும் விசாரணை அதிகாரியின் திருப்பிக்கு ஏற்ப ரூ. 20 ஆயிரத்துக்கு பிணைத் தொகையுடன் ஜாமீன் அளிக்கப்படலாம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
    தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மழை நீர் சேகரிப்புகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று விக்ரந்த் குமார் தோங்கட் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தாக்கல் செய்திருந்த மனுவை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
    இந்த வழக்கு விசாரணகளின்போது, மழை நீர் சேகரிப்புகளை அமைத்தும் அவை சரிவர செயல்படாமல் இருந்ததால் 4 கட்டட நிறுவனங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல், தனியார் மருத்துவமனைகள், பெரு நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் மழை நீர் சேகரிப்புகளை சரிவர அமைக்காததற்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
     பயிர்க்கழிவுகளைச் சேகரிக்கும் இடங்கள்: பயிர்க்கழிவுகளை விவசாயிகளிடம் இருந்து பெற்று, அதை தேக்கி வைக்கவும் மாவட்டம்தோறும் இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றொரு வழக்கில் உத்தரவிட்டது.
    காற்று மாசு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின்  (பொறுப்பு) தலைவரும் நீதிபதியுமான யு.டி. சால்வி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து பயிர்க்கழிவுகளைப் பெற மாவட்டம்தோறும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும். 
    அப்படி சேகரிக்கப்படும் பயிர்க்கழிவுகளை எந்த அளவுக்கு தேக்கி வைக்க முடியும் என்ற தகவலையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும்' என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
    முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது, பயிர்க்கழிவுகள் எரிக்காமல் இருக்க பல்வேறு நெறிமுறைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வகுத்து இரண்டு ஆண்கள் ஆகியும், அதை செயல்படுத்தத் தவறிய பஞ்சாப் மாநில அரசுக்கு தீர்ப்பாய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai