Enable Javscript for better performance
பலாத்கார வழக்கில் ஆதாரம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    பலாத்கார வழக்கில் ஆதாரம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

    By DIN  |   Published on : 04th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போதை மருந்து கலந்த காபியை குடிக்கச் செய்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில்  போதிய சாட்சியம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதில் "2014, டிசம்பர் 31-ஆம் தேதி சீதா ராமா சர்மா என்பவர் தனக்கு போதை மருந்து கலந்த காபியை குடிக்கக் கொடுத்தார். அதன் பின்னர்,  நான் மயக்கமடைந்ததால், பாலியல் பலாத்காரம் செய்தார்.  பின்னர்  என்னை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பலாத்காரம் செய்துவிட்டார்' என்று புகாரில் தெரிவித்திருந்தார்.  இது தொடர்பாக சர்மா மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 328,  376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
    அப்போது,  குற்றம்சாட்டப்பட்ட சர்மா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் திவான், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சர்மா எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை.  அவரிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாடகைக்கு சர்மா வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்னர், இருவரும் ஒன்றாக தம்பதி போல வாழ்ந்து வந்தனர்.  அவரைத் திருமணம் செய்வதாக ஒருபோதும் சர்மா உறுதி கூறவில்லை.  அப்பெண் ஏற்கெனவே திருமணமானவர்' என்று வாதிட்டார். 
    இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் அரசுத் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.  மேலும்,  வழக்குத் தொடுத்த பெண் ஏற்கெனவே திருமாணவர் என்பதும்,  கணவருடன் அவருக்கு விவாகரத்து ஏற்படவில்லை என்பதும் ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது.  புகார்தாரர் திருமணமாகி இருக்கும் போது அவரை எப்படி திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்ற முடியும்.   அவரது சம்மதத்துடனேயே இருவருக்கும் இடையே உறவு நிகழ்ந்துள்ளதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஆகவே,  வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட  நபரை விடுவித்து உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai