Enable Javscript for better performance
பெருங்கற்கள் புதைவிடங்கள் அருகே வீடுகள் கட்ட அனுமதிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பெருங்கற்கள் புதைவிடங்கள் அருகே வீடுகள் கட்ட அனுமதிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 04th January 2018 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அதிக  எண்ணிக்கையில் உள்ள பெருங்கற்கள் புதைவிடங்கள் அருகே வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக  வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற "புராதன நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத் திருத்த மசோதா 2017' மீதான விவாதத்தில் சிதம்பரம்  தொகுதி அதிமுக உறுப்பினர்  எம்.சந்திரகாசி முன்வைத்த கோரிக்கை:  
    தமிழகத்தில் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் 403 உள்ளன. இவற்றில் பல்லவர்களின் பாறை குடைவரைக் கோயில்கள்,  சோழர்கள்,  பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கோயில்களும் இடம் பெற்றுள்ளன. 
    எனது தொகுதியில் உலகப் பாரம்பரிய இடமான கங்கை கொண்ட சோழபுரம் உள்ளது.  அதேபோன்று,  தஞ்சை பெரிய கோயிலும் உலகப் பாரம்பரிய நினைவுச்சின்னமாகும்.  இந்த நினைவுச்சின்னங்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே, இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான எந்தச் சட்டத்தையும் அனுமதிக்க முடியாது.  மேலும், நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் சமரசம் கொள்ளவும் முடியாது.
    அதேவேளையில், புராதன நினைவுச்சின்னங்களின் சில குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள  பாதுகாக்கப்பட்ட  நினைவுச்சின்னங்கள் வரம்பில் வரும் பெருங்கற்கள் புதைவிடங்கள் போன்றவற்றுக்கு தற்போதைய சட்டத்தில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள  403 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில்  அடையாளக் கல்,  தாழி புதைவிடம் போன்ற 162 பெருங்கற்கள் புதைவிடங்கள் உள்ளன.  இந்த நினைவிடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போதும்,  சுதந்திரமடைந்த பிறகும் வெளிநாட்டு தொல்லியல் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டவை.
    தமிழகதத்தில் குறிப்பாக காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,  ஈரோடு, திருப்பூர்,  கோயம்புத்தூர், நீலகிரி,  புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் பெருங்கற்கள் புதைவிடங்கள் உள்ளன.  இவை நகர்ப்புறங்கள்,  புறநகர், கிராமப்புறங்களில் உள்ளன. 
    இந்தப் பெருங்கற்கள் புதைவிடங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில், அரசு, தனியார் மூலம் வீடுகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் தொடர்புடைய உள்கட்டமைப்பு கட்டடங்களை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் எம்.சந்திரகாசி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai