Enable Javscript for better performance
சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜன.9-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜன.9-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 05th January 2018 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
    இது தொடர்பான மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி  முக்தா குப்தா அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திரசேகர் சார்பில் வழக்குரைஞர்கள் சுதிர் நந்த் ராஜு, தீபா ஆகியோர் ஆஜராகி, "சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டது. குற்றப்பத்திரிகையும், துணை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. எனவே, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.  சுகேஷுக்கும், டி.டி.வி. தினகரனுக்கு இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடல் தொடர்பான குறுந்தகடு குறித்து குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுந்தகடு சுகேஷ் தங்கியிருந்த ஹோட்டலில் நடைபெற்ற முதல் நாள் சோதனையின் போது கண்டெடுக்கப்படவில்லை' என்றனர்.
    இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹிரெய்ன் சர்மா,  "சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றக் காவலில் இருக்கும் போதே அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. தனது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிக்கு  தொலைபேசி வாயிலாக  உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் எனக் கூறி பேசிய விவகாரம்,  விசாரணைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினருக்கு பணம் அளித்து சுதந்திரமாக சுற்றித் திரிந்த விவகாரம் ஆகிய நடத்தைகளைக் குறிப்பிடலாம். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தற்போதுதான் தொடங்கியுள்ளது. எனவே, சுகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது ' என்றார்.
    இதை மறுத்த  சுகேஷின் வழக்குரைஞர் "நீதிபதிக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படும் தேதி ஏப்ரல் 28 ஆகும். ஜாமீன் மனு விண்ணப்பித்தது மே 18-ஆம் தேதியாகும். எப்படி நீதிபதியை அழைத்திருக்க முடியும்? நீதிமன்றக் காவலில் இருக்கும் போது எவ்வாறு இதுபோன்று செயல்பட முடியும்?' என்றார். 
    அப்போது குறுக்கிட்ட நீதிபதி முக்தா குப்தா, "இந்த வழக்கில் விசாரணையை முடிக்க எவ்வளவு காலமாகும்?  ஏன் விசாரணை வேகமாக நடைபெறவில்லை? ஒரு தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் முன் அது குறித்து தெளிவு வேண்டும். எப்போது சுகேஷ் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார்? முதல் தகவல் அறிக்கையை தவறாக வாசிக்க வேண்டாம்' என்று அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கடிந்து கொண்டார். இதையடுத்து,  இந்த வழக்கு விசாரணை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai