Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்க மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்களிக்க மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 05th January 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில்  திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது: 
    நிச்சயமற்ற தன்மை சூழல் காரணமாக  தமிழகத்தின் சிவகாசியில் 840 பட்டாசுத் தயாரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.  மேலும், பட்டாசுக்கு அகில இந்திய அளவில் தடை ஏற்படும் என்ற அச்சத்தால் தங்களது உரிமங்கள் பறிபோகும் என்ற பயமும் பட்டாசு தயாரிப்பு ஆலை உரிமையாளர்களிடம் நிலவுகிறது. இதனால்,  இத்தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் தெருவில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    பட்டாசுத் தயாரிப்பு என்பது ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பணியாகும். ஆனால், இதற்கான விற்பனை என்பது தீபாவளிக்கு முன்பு ஒரு மாதம் மட்டுமே நடைபெறுகிறது. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஒவ்வொரு பண்டிகையும் பட்டாசுடன் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா,  சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பல்வேறு தினங்களாகக் கொண்டாடப்படுகிறது.  
    ஆனால், இந்தியாவில் மட்டுமே ஏன் இப்படி இருக்கிறது?  மாசுவுக்கு பட்டாசு மட்டுமே காரணம் அல்ல.  சாலை தூசி,  வாகனப் புகை,  பயிர்க் கழிவுகள் எரிப்பு,  அனல் மின் நிலையங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன. இவற்றுக்கு உரிய கட்டுப்பாடு இல்லை. ஆகவே, மத்திய அரசானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் 1986,  விதி (3)-இல் இருந்து  பட்டாசுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    இதுதான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.   நாட்டின் பொருளாதாரம்,  ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தை தீவிரமாக மத்திய அரசு  பரிசீலிக்க வேண்டும் என்றார் திருச்சி சிவா.
    அப்போது,  அவையில் இருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "திருச்சி சிவா எழுப்பிய விவகாரம் அந்தப் பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்வேன்' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai