Enable Javscript for better performance
தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி பிரகதி மைதானில் சனிக்கிழமை (ஜனவரி 6) தொடங்குகிறது.
    இதுகுறித்து நேஷனல் புக் டிரஸ்ட்  நிறுவனத்தின் தலைவர் பல்தேவ் பாய் சர்மா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: "சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்' என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்ட நிகழாண்டு நடைபெறும் தில்லி உலகப் புத்தக் கண்காட்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தொடங்கி வைக்கிறார். இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் தாமஸ் கோஸோவ்ஸ்கி கெளர விருந்தினராகப் பங்கேற்கிறார்.  சுற்றுச்சூழல் ஆர்வவலர் சுனிதா நாராயண்,  2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிசு பெற்ற எழுத்தாளர் கலியா பபதாகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். 
    சுற்றுச்சூழல்:  "சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்' என்ற கருத்தாக்கத்தை முன்நிறுத்தும்  வகையில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.  பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல், நீர் மாசுபாடு ஆகியன தொடர்பான பிரச்னைகளை அறியவும், தீர்வுகளை கண்டறிவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த அரங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில், பிரம்பு, சணல், உமி உள்ளிட்டவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
    இக்கண்காட்சியில் கெளரவ நாடாக நிகழாண்டு ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்கிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பெல்ஜீயம், கனடா, சீனா,  டென்மார்க்,  எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், இத்தாலி, மெக்சிக்கோ, நேபாளம், பாகிஸ்தான், போலந்து, ஸ்பெயின்,  இலங்கை, ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளும், யுனெஸ்கோ போன்ற பன்னாட்டு அமைப்புகளும்  பங்கேற்கின்றன.  ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அரங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் செறிவான இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்துரைக்கும்.  இதில் ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழி புத்தகங்கள், குழு விவாதம்,  உரை, குறும்படம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி ஆகியவை இடம்பெறும்.  வழக்கம்போல  குழந்தைகள் அரங்கு அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
    பதிப்பாளர்கள்:  இது தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், வங்கம், அஸாமி, குஜாராத்தி, ஹிந்தி, மைத்திலி, உருது உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த சுமார் 800 பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்து, புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர். இக்கண்காட்சியில் நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 30 என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். புத்தகக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றார் பல்தேவ் பாய் சர்மா. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai