Enable Javscript for better performance
மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட்: கைதானவர்களில் 93% பேர் பெண்கள்!- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட்: கைதானவர்களில் 93% பேர் பெண்கள்!

    By DIN  |   Published on : 05th January 2018 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 2017-ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரிடம் பிக்பாக்கெட் அடித்து மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்களிடம் சிக்கியவர்களில் 93 சதவீதம் பேர் பெண்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
    இது குறித்து சிஐஎஸ்எஃப்  மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியில் மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் கவனித்து வருகின்றனர். மெட்ரோ ரயில்களில் திருட்டைத் தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் அடங்கிய  சிறப்புப் படையினர் மெட்ரோ ரயில்களில் அவ்வப்போது  பயணிகளுடன் சாதாரண உடையில் பயணம் செய்து கண்காணித்து வருகின்றனர்.  
    அவர்கள் அனைத்து மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் கடந்த 2017-இல் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்ததாக மொத்தம் 1,311 பேர் பிடிபட்டனர்.  இதில் 89 பேர் ஆண்கள். 1,222 பேர் பெண்கள் ஆவர். பிக்பாக்கெட் திருட்டில் ஆண்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் பிடிபட்டவர்களில்  93.30 சதவீம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதிக அளவில் பிக்பாக்கெட் திருடர்கள் பிடிபட்டாலும்,  வழக்குகள் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. பிக்பாக்கெட்டில் ஈடுபடுவோரை சிஐஎஸ்எஃப் படையினர் பிடித்தாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சிஐஎஸ்எஃப்-க்கு அதிகாரம் இல்லை. பிடிபட்டவர்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவர். சில குறிப்பிட்ட பிக்பாக்கெட் திருடர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், அவர்கள்  மீண்டும் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் உடனே அக்குற்றத்தில் ஈடுபடாவிட்டாலும், சில நாள்கள் கழித்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் சென்று அதே குற்றத்தைச் செய்கின்றனர். பிடிபட்ட பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபடுவோர்களில் பலர் மீண்டும் மீண்டும் பலமுறை கைதாகின்றனர்.
    ராஜீவ் செளக், சென்ட்ரல் செக்ரடேரியேட், சாந்தினி செளக், சாவ்ரி பஜார், புது தில்லி உள்ளிட்ட  பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் பிக்பாக்கெட் திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது.  இதில் குறிப்பாக பெண்கள் குழுவாக இத்திருட்டை மேற்கொள்கின்றனர். 
    அவர்களில் பெரும்பாலோர்  குழந்தைகளை  தங்களுடன் எடுத்துக் கொண்டு பயணிகளை எளிதாக ஏமாற்றி பிக்பாக்கெட்டில் ஈடுபடுகின்றனர்.  அவர்களில் ஒருவர்,  ஒரு குறிப்பிட்ட பயணியை குறிவைத்து பிக்பாக்கெட் அடிப்பார்.  
    குழுவில் உள்ள மற்றவர்கள் மற்ற பயணிகள் கவனிக்காத வகையில் ,அந்தக் குறிப்பிட்ட பயணியை சுற்றி நின்று கொள்வர்.  பிக்பாக்கெட் அடித்து முடிந்தவுடன் அக்குழுவினர் எளிதாகத் தப்பிவிடுவர். பிடிபட்ட பெண் பிக்பாக்கெட் திருடர்களிடம் இருந்து மடிக் கணினி, விலையுயர்ந்த செல்லிடப்பேசிகள், தங்க நகைகள், பர்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
    இதேபோன்று, கடந்த ஆண்டில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம் செய்ததாக  1,941ஆண்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  மெட்ரோ ரயில் நிலையங்களில் துயரத்தைச் சந்தித்த சுமார் 248 பெண்களுக்கு சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். இதுதவிர, காணாமல் போன 153 குழந்தைகளை சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் மீட்டு,  அவர்களது பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர் என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai