Enable Javscript for better performance
அடர் பனிமூட்டம்: 17 விமானங்கள், 60 ரயில்கள் தாமதம்: தில்லி விமானநிலையத்தில் அலைமோதியது கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அடர் பனிமூட்டம்: 17 விமானங்கள், 60 ரயில்கள் தாமதம்: தில்லி விமானநிலையத்தில் அலைமோதியது கூட்டம்

    By DIN  |   Published on : 06th January 2018 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அடர் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், விமான சேவை, ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும், விமானங்கள் தாமதமாக வந்ததால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.
    தில்லியில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. மேலும், குளிர் காற்றும் வீசுகிறது. அன்று முதல் விமானங்கள் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகியுள்ளன. 
    இக்கால கட்டத்தில் காண்புதிறன் 50 மீட்டர் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. விமான ஓடுதளத்தில் காண்பு திறன் 125 மீட்டருக்கு குறைவாக இருந்தால்தான் விமானங்கள் தரையிறங்க முடியும். 
    ஆனால், காண்பு திறன் 125 மீட்டருக்கு மேலே இருந்தால்தான் விமானங்கள் மேலே புறப்பட்டுச் செல்ல முடியும். விமானம், ரயில்கள் தாமதமாக வருவதால் குறித்த நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை என்றும் பணிகளை சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலும் கடும் அடர் பனிமூட்டம் நிலவியது. இதனால், சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலை 5.30 மணி அளவில் காண்புதிறன் 300 மீட்டராகப் பதிவாகியது. பின்னர் 8.30 மணியளவில் காண்புதிறன் 600 மீட்டராக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சுமார் 17 விமானங்கள் தாமதமாக வந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பயணிகள் பலர் புகைப்படம் பிடித்து சுட்டுரையில் பதிவேற்றம் செய்தனர். மேலும், சிலர் தாமதம் குறித்து விமான நிலைய நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. விமான நிலைய நுழைவு வாயில்களில் பயணிகளின் உறவினர்களும், நண்பர்களும் அதிகமான அளவில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனால், விமான நிலையம் முழுவதும் கூட்ட்ம் அலைமோதியது.
    இந்நிலையில், கடந்த சில நாள்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை காலை காண்புதிறன் 300 மீட்டருக்கு கீழே செல்லாததால் மோசமான நிலை ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். 
    ரயில் சேவை பாதிப்பு:இதேபோன்று தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அடர் பனிமூட்டம் நிலவி வருவதால் வெள்ளிக்கிழமை ரயில்களின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மொத்தம் சுமார் 62 ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருந்ததாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், 20 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த 5 தினங்களாக புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்து வருகின்றன. 
    வானிலை: தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அடர் பனிமூட்டம் நிலவியது. காலை வேளையில் பனிப் பொழிவு இருந்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். 
    அலுவலகம் செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 97 சதவீதமாக இருந்தது. கடந்த இரண்டு தினங்களாக அதிகாலை வேளையில் தில்லியில் கடுங் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 
    இந்நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 6) மிதமான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai