Enable Javscript for better performance
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி முடிவு காணப்பட வேண்டும்:  தில்லி உயர் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி முடிவு காணப்பட வேண்டும்:  தில்லி உயர் நீதிமன்றம்

    By DIN  |   Published on : 06th January 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இறுதி முடிவு காணப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசு, தில்லி அரசு, தெற்கு தில்லி மாநகராட்சி, தில்லி போலீஸ் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 
    "நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் முதியோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று தெற்கு தில்லியைச் சேர்ந்த குடியிருப்பு நலச் சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தார். 
    இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை (பொறுப்பு) நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
    அப்போது, தெற்கு தில்லி மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "சாலை ஆக்கிரமிப்புகளை மாதம்தோறும் அகற்றினாலும் அவர்கள் மீண்டும் வந்துவிடுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது தில்லி காவல் துறையினரும் மாதம்தோறும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
    இதைக் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற கோரிக்கைகளைக் கேட்பதற்காக நீதிமன்றம் கூடவில்லை. இந்த விவகாரத்தில் கருத்தையோ, எதிர்கருத்தையோ நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இறுதி முடிவு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு, தில்லி அரசு, தெற்கு தில்லி மாநகராட்சி, தில்லி போலீஸ் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், "நடைபாதையில் கட்டண வசூல் செய்வதால் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீண்டும் வருகின்றன' என்று கருத்து தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai