Enable Javscript for better performance
வருகைப் பதிவை கட்டாயமாக்கும் முடிவுக்கு ஜே.என்.யு. மாணவர்கள் கடும் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வருகைப் பதிவை கட்டாயமாக்கும் முடிவுக்கு ஜே.என்.யு. மாணவர்கள் கடும் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 06th January 2018 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருகைப் பதிவைக் கட்டாயமாக்கும் முடிவுக்கு தில்லியில் உள்ள ஜவாஹர்லால் பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
    ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மாணவர்களுக்கும் வருகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுகுறித்து கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழகக் கல்விக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக பல்கலை. சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. 
    இதன்படி இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, ஆய்வு மாணவர்களும் தினமும் தத்தமது துறைகளில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகையைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
    இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: அவசரகதியில் ஒரு கூட்டத்தைக் கூட்டி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியாமல் இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி உள்நோக்கத்தோடு இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பல்கலை. ஆசிரியர் சங்கமும் மாணவர் அமைப்புகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், துணைவேந்தர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கூடி போராட்டம் நடத்தினோம். துணைவேந்தரிடம் மனு கொடுக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால், நாங்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றனர். 
    இது குறித்து ஜேஎன்யு பிஹெச்டி ஆய்வு மாணவர்கள் கூறுகையில், "வருகையை கையொப்பமிட்டு பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதால் கல்வித் தரம் உயராது. "ஜே.என்.யு. போன்ற ஒரு பல்கலை.யில் மாணவர்களின் வருகையை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் முடிவு தேவையற்றதும், ஆபத்தானதுமாகும். இது ஜே.என்.யு.வின் சுதந்திரத் தன்மையை அழிக்கும் செயல். போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணித்து அவர்களை வேறு வழிகளில் பழிவாங்கவே துணைவேந்தர் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 
    வருகைப் பதிவு போன்ற விஷயங்கள் வழக்கம் போல அந்தந்த ஆசிரியர்-மாணவர் மற்றும் ஆய்வு நெறியாளர்கள் முடிவுக்கே விடப்படவேண்டும். மாணவர்களின் தரம் அவர்களின் ஆய்வு கட்டுரைகளில் வெளிப்படும்' என்றனர். 
    பல்கலை. நிர்வாகத் தரப்பினர் கூறுகையில், "முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்கள் வகுப்புக்கு சரிவர வருவதில்லை. அவர்களின் வருகையை கண்காணிக்கவே வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறு பழிவாங்கும் நோக்கம் அல்ல. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai