சுடப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞரின் மார்பில் இருந்து 97 குண்டுத் துகள்கள் அகற்றம்
By DIN | Published on : 07th January 2018 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆரிஃப் உசேன் (23) மார்பு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த 97 குண்டுத் துகள்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
சொத்துத் தகராறு பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முராதாபாத்தில் ஆரிஃப் உசேனின் மார்பு பகுதி அருகில் வைத்து சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, துப்பாக்கி தோட்டா அகற்றப்பட்டு அவர் உயிர் பிழைத்தார். எனினும், துப்பாக்கி தோட்டாவில் இருந்து வெளியேறிய 97 குண்டுத் துகள்கள் அவரது மார்பு பகுதியில் தங்கிவிட்டன.
அவை பப்பாளி பழத்தின் விதைகளைப்போல், அவரது நுரையீரல் அருகே இருந்தன. நாள்கள் செல்ல செல்ல குண்டுத் துகள்கள், வெடிகுண்டாக மாறிவிட்டன. உசேனின் மார்பு பகுதி டென்னிஸ் பந்தைப் போல் வீங்கிவிட்டது.
உசேன் மார்பில் உள்ள குண்டுத் துகள்களை அகற்றினால் அது அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் எந்த மருத்துவரும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வரவில்லை.
இதையடுத்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உசேன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குண்டுத்துகள்களை வெற்றிகரமாக நீக்கினால் எய்ம்ஸ் அறுவை சிகிச்சை நிபுணர் பிலாப் மிஸ்ரா.
இதுகுறித்து பிலாப் மிஸ்ரா கூறுகையில், "இந்த அறுவை சிகிச்சை சுலபமானது அல்ல. இதில் உசேனின் உயிருக்கே ஆபத்தும் ஏற்படலாம் என்று அவரிடமே கூறியிருந்தேன். என்ன ஆனாலும், அறுவை சிகிச்சைக்கு தயாராக உள்ளதாக உசேன் கூறினார். இது எனக்கு மேலும் தைரியத்தை அளித்தது. இந்தத் துகள்கள் இதயத்துக்கும், நுரையீரலுக்கும் மிக அருகில் இருந்ததால் அதை வெளியேற்றுவது சவாலாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏராளமான சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.
அதன்பின்னர் நுண்ணிய அறுவை சிகிச்சை மூலம் அவரது மார்பு பகுதியில் இருந்து குண்டுத் துகள்கள் அகற்றப்பட்டன. பின்னர் 4 நாள்கள் கழித்து உசேன் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டார் என்று தெரிவித்தார்.