Enable Javscript for better performance
செங்கோட்டைப் பகுதி வாகன நிறுத்துமிடப் பிரச்னை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி செங்கோட்டையை ஒட்டிய பகுதியில் நிலவிவரும் வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணுமாறு வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளுக்குதுணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டார். 
    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ஜாமா மசூதி, செங்கோட்டை, சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தில்லி பொதுப்பணித் துறை, காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.
    துணைநிலை ஆளுநரின் ஆய்வு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: 
    ஜாமா மசூதி, செங்கோட்டை, சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் 8- ஆம் தேதி தில்லி துணைநிலை ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செங்கோட்டையின் முகப்பை தூய்மையாகப் பேண வேண்டும். அருகிலுள்ள பூங்காக்களில் பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்பன பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அவர் அப்பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட வரலாற்று புகழ் பெற்ற இடங்களை ஏசியன் மாநாட்டுக்கு முன்பாக தூய்மைப்படுத்தி அழகுபடுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். 
    செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் குடியிருப்புகளை உடனடியாக அகற்றவும், அப்பகுதிகளைத் தூய்மையாகப் பேணவும் அவர் உத்தரவிட்டார். 
    வாகன நிறுத்துமிடங்கள்: செங்கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளையும் உடனடியாக மேம்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார். மேலும், செங்கோட்டையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வாகன நிறுத்துமிடங்கள் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    இப்பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் பெயர்ப்பலகை வைப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார். 
    வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களை ஜனவரி மாதம் 15- ஆம் தேதிக்குள் அழகுபடுத்துமாறு உத்தரவிட்டார். 
    மேலும், ஆசியான் மாநாட்டின் போது, தில்லியில் செங்கோட்டை உள்பட வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு 
    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகைதர இருப்பதால் அவற்றை அழகுபடுத்த வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai