Enable Javscript for better performance
தில்லியில் கடும் குளிர்: 4.2 டிகிரி செல்சியஸாக பதிவு!- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் சரிவடைந்து இந்தப் பருவத்தின் புதிய குறைந்தபட்ச அளவாக 4.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையே, தொடர்ந்து 6-ஆவது நாளாக அடர் பனிமூட்டம் காரணமாக விமான சேவையும், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
    தில்லியில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. அண்டை மாநிலங்களாக ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்டவற்றிலும் இதே நிலை நீடிக்கிறது. தில்லி, தலைநகர் வலயப் பகுதியில் தொடர்ந்து அடர் பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
    இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை 8.30 மணியளவில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 4.20 செல்சியஸாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியது. இது இந்தப் பருவத்தின் புதிய குறைந்தபட்ச அளவு என்று தெரிவிக்கப்பட்டது. 
    மேலும் காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதமாகப் பதிவாகியுள்ளது. இதேபோல பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 6 டிகிரி செல்சியஸாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. ஆயா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதவீதமாகவும் இருந்தது.
    இந்நிலையில், வெப்பநிலை, காண்புதிறன் குறைந்ததால் விமான சேவை, ரயில் சேவை 6-வது நாளாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களது விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
    காண்பு திறன் மிகவும் குறைந்ததால், தில்லி, பாட்னா, வாராணசி, சண்டீகர், லக்னெள ஆகிய நகரங்களில் தங்களது விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
    இதேபோன்று மோசமான வானிலை காரணமாக தில்லி, ஜம்மு, வாராணசி ஆகிய மார்க்கங்களில் தங்களது விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக இன்டிகோ நிறுவனம் தனது சுட்டரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
    இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக தில்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையத்தில் தங்களது விமானங்கள் புறப்பாடு, வருகை ஆகியவை பாதிகப்பட்டுள்ளதாகவும், பயணிகள் விமானங்களின் புறப்பாடு, வருகை நேரங்களை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுமாறு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்தது.
    36 ரயில்கள் ரத்து: இதற்கிடையே, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக சனிக்கிழமையும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
    இதைத் தொடர்ந்து, 36 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 30 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 85 ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருந்தன என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    கடும் குளிர்: தில்லியில் அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக புதன்கிழமையிலிருந்து கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளில் காலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், பிற்பகலில் சற்று வெயில் வந்தவுடன் பொதுமக்கள் குளிருக்கு இதம் காணும் வகையில், பூங்காகாக்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுவதைக் காண முடிந்தது. மேலும், ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் குளிரை சமாளிக்க சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்ததைக் காண முடிந்தது.
    முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மிதமான பனிமூட்டம் காணப்படும். குறந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai