Enable Javscript for better performance
புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    26-ஆவது புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி தில்லி பிரகதி மைதானில் சனிக்கிழமை தொடங்கியது.இக்கண்காட்சியை காணொளி வாயிலாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர் தொடங்கி வைத்தார். 
    அப்போது அவர் பேசுகையில், "இந்த பூமியிலிருந்து தேவைக்கு அதிகமானதை எடுத்துவிட்டோம். பூமியை மனிதர்களின்தேவைக்கு அதிகமாக சுரண்டியுள்ளதால் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 
    மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வீணாக்காமல் இருப்பது, டீசல், பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக பயணத்தில் மிதி வண்டிகளைப் பயன்படுத்துதல் அல்லது நடந்து செல்லுதல் போன்றவற்றை மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். 
    ஆனால், இவற்றுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க கூட்டு முயற்சியும் தேவையாகிறது' என்றார்.
    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நாராயண் பேசுகையில், "மேற்கத்திய உலக நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி, பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றன. இங்கே நாம் கடும் பனி, கடும் வறட்சி, கடும் மழை உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். பருவநிலை மாற்றத்தால் ஏழைகள், விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோர்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
    கெளர விருந்தினராக கலந்து கொண்ட இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் தாமஸ் கோúஸாவ்ஸ்கி பேசுகையில், 
    "இதுபோன்ற புத்தகக் கண்காட்சியின் நோக்கம் பொதுமக்களை அதிக அளவில் பங்கேற்க செய்வதாகும். 
    இதன்மூலம், புத்தகக் கண்காட்சியின் மையக் கருத்தாக உள்ள சுற்றுச்சூழலும், பருவநிலை மாற்றமும் என்ற செய்தியை பொது மக்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்ல முடியும். சமூக மாற்றத்துக்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சி பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவுக்கும், ஐரோப்பிய 
    நாடுகளுக்கும் இடையில் பண்பாட்டு இணைப்பை மேம்படுத்தவும் இக்கண்காட்சி பயன்படும்' என்றார். 
    நிகழ்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிசு பெற்ற எழுத்தாளர் கலியா பபதாகி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் மது ரஞ்சன் குமார், நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பல்தேவ் பாய் சர்மா, இயக்குநர் ரீதா செளத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ஜனவரி 14-ஆம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், வங்கம், அசாமி, குஜாராத்தி, ஹிந்தி, மைத்திலி, உருது உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த சுமார் 800 பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்து, புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர். 
    இக்கண்காட்சியில் நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 30 என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். புத்தகக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai