Enable Javscript for better performance
"ஆசியான்' மாநாடு: பழைய தில்லியை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்!- Dinamani

சுடச்சுட

    

    "ஆசியான்' மாநாடு: பழைய தில்லியை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்!

    By DIN  |   Published on : 08th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் விரைவில் "ஆசியான்' அமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், பழைய தில்லி பகுதிகளை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேல்நிலை மின்வயர்களை, தரை வழியாக கொண்டு செல்லவும், அனைத்து கடைகளின் முகப்புகளிலும் ஒரே சீரான பெயர்ப் பலகைகளை வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    ஆசியான் மாநாடு: ஆசியான் கூட்டமைப்பு, புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதாகும். 
    இந்த கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு தில்லியில் வரும் 19-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் தில்லிக்கு வருகை தரவிருக்கின்றனர்.
    இதனால், தில்லியிலுள்ள பொது இடங்களையும் சாலைகளையும் அழகுபடுத்துமாறு, மூன்று மாநகராட்சிகளுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த நவம்பர் மாதம் அறிவுறுத்தியிருந்தார்.
    முக்கியத்துவம் வாய்ந்த பழைய தில்லி: செங்கோட்டை, ஜாமா மசூதி, சாந்தினி சௌக் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பழைய தில்லியை பார்வையிட வெளிநாட்டு பிரமுகர்கள் பெரிதும் விரும்புவர் என்பதால், பழைய தில்லியை அழகுபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
    இதுதொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
    செங்கோட்டை, ஜாமா மசூதி, சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பழமையான கட்டடங்களைக் கொண்ட இப்பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் பெயர்ப் பலகைகள் வெவ்வேறுவிதமாக இருப்பது, அப்பகுதியின் அழகை குறைக்கிறது. இதனால், ஒரே சீரான பெயர்ப் பலகைகளை வைக்குமாறு, அனைத்து கடைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து வர்த்தக சங்கங்களுடனும் பேசி, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    பெயர்ப் பலகைகள் எந்த அளவில், என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளோம். அதன்படி, வரும் 15-ஆம் தேதிக்குள் பெயர்ப் பலகைகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மேல்நிலை வயர்கள்: பழைய தில்லியில் உள்ள மேல்நிலை மின்வயர்களையும், இதர தொலைதொடர்பு வயர்களையும் தரைகீழ் வயர்களாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார் அந்த அதிகாரி.
    முன்னதாக, ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, சாந்தினி சௌக் உள்ளிட்ட பழைய தில்லி பகுதிகளில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை, துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை பார்வையிட்டார். பாரம்பரியப் பகுதிகளை அழகுபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai