Enable Javscript for better performance
கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு? அரசு மருத்துவமனை மீது விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு? அரசு மருத்துவமனை மீது விசாரணை : உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 08th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்க மறுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் அருணா ஆஸப் அலி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அலட்சியத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்குமாறு தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பான விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் பிங்கி.  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு,  நவம்பர் 17-ஆம் தேதி காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அருணா ஆஸப் அலி மருத்துவமனைக்கு சென்றார். 
    அங்கு பணியில் இருந்த மருத்துவர்,  கர்ப்பிணியான பிங்கியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததாகவும், பிரசவ வலியைக் குறைப்பதற்கான ஊசியை  மட்டும் போட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தை பிரசவிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறி பிங்கியை மருத்துவர் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஆட்டோவில் பிங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட் பேருந்து நிலையம் அருகே அவருக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. பிறகு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு, பெண் ஒருவர் தேவையான பிரசவ உதவிகளை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிங்கி தில்லி உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில்,  அருணா ஆஸப் அலி மருத்துவமனை நிர்வாகம் தனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு கோரினார்.
    வழக்குரைஞர்கள் சிஜா நாயர் பால்,  தீபக் குமார் சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த புகார் மனுவில், "தனக்கு பிரசவம் பார்த்த பெண்ணுக்கும், மருந்துகள் வாங்குவதற்கும் ரூ.7 ஆயிரம் வரை பணம் செலவழித்தேன்.  எனக்கு பிரசவம் பார்க்காமல் அருணா ஆஸப் அலி மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அலட்சியத்துடன் நடந்துகொண்டனர்' என்று முறையிட்டுள்ளார்.
    இந்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
    மனுதாரர் பிங்கி கூறுவது உண்மையாக இருந்தால், இது பற்றி விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மருத்துவ அலட்சியத்தில் ஏதும் ஈடுபட்டனரா என்பதை நிர்ணயிக்கும் வகையில் தில்லி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும். 
    இந்த விசாரணை 12 வாரங்களுக்குள் முடிக்கப்பட  வேண்டும்.  விசாரணையின் முடிவில் மருத்துவ அலட்சியம் இருந்ததாக கண்டறியப்பட்டால், அதுதொடர்பாக தில்லி மருத்துவக் கவுன்சிலிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். 
    மேலும்,  மனுதாரர் பிரசவத்திற்காக செலவிட்ட தொகை ரூ.7 ஆயிரத்தை, அவருக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தில்லி அரசு, தில்லி அரசின் சுகாதார, குடும்ப நலத் துறை, அருணா ஆஸாப் அலி மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனுவை பைசல் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai