Enable Javscript for better performance
காவலரைக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுதலை: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவலரைக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுதலை: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

    By DIN  |   Published on : 08th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி காவலரைக் கொலை செய்ய முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இருவரை போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    இது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு: தில்லியில் 2012,  ஜனவரி 20-ஆம் தேதி ஒரு கொள்ளை வழக்கில் சிலரை கைது செய்வதற்காக போலீஸார் ஓரிடத்தில் கூடியிருந்தனர். அப்போது,  காவலர்  ஒருவரை குற்றம்சாட்டப்பட்ட  நபர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.  மற்றொரு நபர் காவலரை கத்தியால் குத்த முயன்றார்.  அப்போது, போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.  இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், "போலீஸார் தங்கள் மீது பொய் வழக்குப் புனைந்துள்ளனர்.  நாங்கள் காவலரைக் கொலை செய்யும் முயற்சியில் ஏதும் ஈடுபடவில்லை' என்று முறையிட்டனர்.
    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றத்தை அரசு தரப்பு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை.  2012-ஆம் ஆண்டில் கொலை முயற்சி சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் செல்லிடப்பேசியின் பயன்பாடு பரவலாக இருந்தது.  இதனால்,  குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீஸார் கூடியிருந்த இடம் குறித்த தகவல்,  சம்பவம் நிகழ்ந்த நேரம், தேதி ஆகிய விவரங்களையும் செல்லிடப்பேசியின் சிடிஆர் (அழைப்பு விரிவான பதிவு) மூலம் எளிதாக பெற்றுவிட முடியும்.  ஆனால், அத்தகைய விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.  மேலும்,  குற்றம்சாட்டப்பட்ட நபர் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவின் ஈயத்தை போலீஸார் மீட்கவில்லை.  இதுபோன்ற வலுவான ஆதாரங்கள் இல்லாததால் போலீஸார் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் நிச்சயமற்ற அல்லது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.  இதனால், குற்றச்சாட்டில் இருந்து இருவரையும் விடுவிக்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai