Enable Javscript for better performance
குடியரசு தின ஒத்திகை: தில்லி வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை நேரத்தை குறைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின ஒத்திகை: தில்லி வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை நேரத்தை குறைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு தின ஒத்திகையையொட்டி,  தில்லி வான்வெளியில் வர்த்தக விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நேரத்தின் அளவை குறைக்க வேண்டும் என விமான சேவை நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளன.
    ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பு தில்லியில் நடைபெற உள்ளது. இதையொட்டி,   ஜனவரி 18 முதல் ஜன. 26 வரை தில்லி வான்வெளியில் காலை 10.35 மணி முதல் நண்பகல் 12.15 வரை விமானங்கள் பறப்பதற்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
    இந்த நேரத்தின்போது  வான்பகுதியில் போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதால் வர்த்தக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான சேவை நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
    இத்தடை காரணமாக தினமும் சுமார் 100 விமானங்களின் சேவை பாதிக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்து நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. இது தொடர்பாக இந்நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது: 
    விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட  தடை நேரத்தில்  விமானங்கள் தில்லி வான்வெளியில் பறக்கவோ,  தரையிறங்கவோ, புறப்படவோ முடியாது. இதனால் தினம்தோறும் சுமார் 100 விமானங்கள் என்ற அடிப்படையில் 9 நாள்களிலும் சுமார் 900 விமானங்கள் இயக்குவது பாதிக்கப்படும்.
    மேலும், இத் தடை காரணமாக உள்ளூர் விமானங்களை அந்த குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.  அதேநேரம்,  சர்வதேச விமானங்களின் புறப்பாடு, வருகை நேரமும் மாற்றியமைக்கப்படவுள்ளன.  சுமார் 500 உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. 
    கடந்த பல ஆண்டுகளாக குடியரசு தினத்தையொட்டிய நாள்களில் தில்லி வான்வெளியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக 60 முதல் 90 நிமிடங்கள் வரை மட்டுமே விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்படுவது வழக்கம். ஆனால்,  இந்த ஆண்டு வான்பரப்பை 105 நிமிஷங்களுக்கு மூடவுள்ளனர்.  
    விமானங்கள் பறக்க 105 நிமிடங்கள் தடை என்பது மிகவும் அதிகமாகும்.  கடந்த  ஆண்டுகளைப்போல விமானம் பறக்க விதிக்கப்படும் தடைக் காலத்தை 60 முதல்  90 நிமிடங்களாக  குறைக்க வேண்டும் என்றனர்.
    இதனிடையே,  உள்ளூர் விமானங்களை ரத்து செய்ய விமான சேவை நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதால்,  இந்த குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களில் பயணிப்பதற்காக ஏற்கெனவே டிக்கெட் பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அந்தக் கட்டணம் திருப்பி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    "பாதிக்கப்படும் பயணிகளுக்கு கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும்' என  ஏர் இந்தியா, விஸ்தரா ஆகிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி "தினமணி' நிருபரிடம் கூறியதாவது: 
    விமானம் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலையில்,  பாதிக்கப்படும் பயணிகள் தங்களது பயண நேரத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.  
    இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு பயணக் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai