Enable Javscript for better performance
தில்லியில் குளிரின் தாக்கம் நீடிப்பு: 28 ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் குளிரின் தாக்கம் நீடிப்பு: 28 ரயில்கள் ரத்து

    By DIN  |   Published on : 08th January 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வருகிறது. நகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அடர் பனிமூட்டம் காரணமாக  ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    தில்லியில் நிகழாண்டின் தொடக்கத்தில் இருந்து  பனிமூட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.  தில்லி மட்டுமன்றி அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பஞ்சாபிலும் குளிர் வாட்டி வைத்து வருகிறது. தில்லி, தலைநகர் வலயப் பகுதியில் அடர் பனிமூட்டத்துடன் மாசுவின் அளவும் அதிகமாக இருப்பதால்  நகரவாசிகள்  சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    தாக்கம் நீடிப்பு: தில்லியில் நிகழ் குளிர் பருவத்தில் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 4.20 செல்சியஸாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை பதிவாகியிருந்தது. 
    இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமையும் பனி மூட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.  காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 100 சதமாகப் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காண்பு திறன் 400 மீட்டர்களாக இருந்தது.  இதனால், காலை வேளையில் விமான சேவையில் தடங்கல் ஏற்பட்டது. 
    28 ரயில்கள் ரத்து: இதனிடையே, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்றும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன்,  9 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 36 ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    மாசு அளவு: தலைநகரில் காற்றில் மாசு நுண்துகள்களின் (2.5 பிஎம்) அளவு மிகவும் மோசமான பிரிவில் இருந்து வருகிறது. லோதி ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 2.5 பிஎம் நுண்துகள்கள் தொடர்ந்து மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. 
    முன்னறிவிப்பு: நகரில் திங்கள்கிழமை மிதமான பனிமூட்டம் காணப்படும். குறந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
     

    குளிருக்கு 44 பேர் பலி: கபில் மிஸ்ரா புகார்
    தலைநகரில் வாட்டி வதைக்கும் குளிருக்கு கடந்த 6  நாள்களில் வீடற்றோர் 44 பேர் இறந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) இறந்தவர்களின் விவரத்தை பகிர்ந்து 
    ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள கருத்து வருமாறு: கடந்த 6 நாள்களில் மட்டும்,  தில்லியில் உள்ள சாலையோரங்களில் உறங்கிய 44 பேர் குளிரால் இறந்துள்ளனர். இறந்தவர்களின் விவரம் அனைத்தும் காவல்துறையின் ஆவணங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 மற்றும் 2 வயதுடைய குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.  முதல்வர் கேஜரிவாலின் பொய் உயிரைப் பறித்துவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
    மேலும், அவரது சுட்டுரைப் பக்கத்தில் ஷாபூர் ஜாட்டில் இயங்கி வரும் "சென்டர் ஃபார் ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட்' (சிஎச்டி) நிர்வாக இயக்குநர் சுனில் குமார் எலிடா ஞாயிற்றுக்கிழமை  வெளியிட்ட செய்தி அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில், இறந்தவர்களின் விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மண்டல ஒருங்கிணைந்த காவல்துறை ஒருங்கிணைப்பு மூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மாவட்டம், காவல் நிலையம், பாலினம், வயது, இறந்தவர்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்,  தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai