Enable Javscript for better performance
கட்டாய வருகைப் பதிவை புறக்கணிக்க ஜேஎன்யு மாணவர்கள் சங்கம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கட்டாய வருகைப் பதிவை புறக்கணிக்க ஜேஎன்யு மாணவர்கள் சங்கம் முடிவு

    By DIN  |   Published on : 09th January 2018 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கட்டாயமாக்கப்படவுள்ள  வருகைப் பதிவை முறையைப் புறக்கணிக்க அப்பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்  முடிவு செய்துள்ளது. 
    ஜேஎன்யுவில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மாணவர்களுக்கும் வருகையைப் பதிவு செய்வது  கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது.
    இதன்படி,  இளங்கலை,  முதுகலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி,  ஆய்வு மாணவர்களும் தினமும் தத்தமது துறைகளில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால்,  பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும்,  துணைவேந்தர் அலுவலகம் முன்பாக திரண்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் தலைவர் கீதா குமாரி திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, வருகைப் பதிவேடு முறையைக் கைவிடக் கோரும் வகையில் 2,500 மாணவர்கள் கையெழுத்திட்டிருந்த மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இதுபோன்று வருகைப் பதிவை கட்டாயமாக்கும் நடவடிக்கையால் கல்விச் சுதந்திரம் எவ்வாறு தடுக்கப்படும் என்பதையும்,  ஜேஎன்யுவின் கலாசாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் பல்கலை. நிர்வாகத்திடம் விளக்கினோம்.  மேலும்,  வளாக மாணவர்கள் வகுப்புகளுக்கு மட்டுமின்றி ஹோட்டல், உணவகங்களுக்கும் எந்தந்த நேரங்களில் செல்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தோம்.  மாணவர்களுக்கு கற்றல் என்பது 24 மணி நேரமும் உள்ளது.  எனினும்,  இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) மாதிரியை முன்னிருத்தி வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படுவதைக் கடைப்பிடிக்குமாறு துணைவேந்தர் கேட்டுக் கொண்டார்' என்றார்.
    இதுகுறித்து ஜே.என்.யு. மாணவர்கள் சங்கத்தின் இணைச் செயலர் சுபான்ஷு  சிங் கூறுகையில், "வருகைப் பதிவை கட்டாயமாக்கும் நடவடிக்கை தொடர்பாக பல்கலை. நிர்வாகம் சில வகுப்புகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.  இப்பிரசாரத்தில் சில பேராசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர்' என்றார்.
    எனினும், ஜே.என்.யு.  ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஆயிஷா கித்வாய் கூறுகையில்,  "ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் அமைப்பு முடிவு எடுக்கும்' என்றார். இந்நிலையில்,  வருகைப் பதிவை புறக்கணிக்க உள்ளதாக ஜே.என்.யு. மாணவர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai