Enable Javscript for better performance
தென் மாநில சிறைக்கு மாற்றக் கோரும் சுகேஷின் மனு மீதான விசாரணை ஜன.22-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தென் மாநில சிறைக்கு மாற்றக் கோரும் சுகேஷின் மனு மீதான விசாரணை ஜன.22-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 09th January 2018 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் மாநில சிறைக்கு தன்னை மாற்றக் கோரும் சுகேஷ் சந்திரசேகரின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
    அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் சுகேஷ் சந்திரசேகர் உள்ளார். அவரது  ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு (ஜனவரி 9)  ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், தன்னை தென் மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் மூலம் சுகேஷ் சந்திரசேகர் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    அதில், "சுகேஷுக்கு எதிரான வழக்குகளில் பெரும்பாலனவை தென் மாநிலங்களில் உள்ளன. விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது  தில்லி காவல்துறை அவருக்குப் பாதுகாப்பு  வழங்க மறுத்து வருகிறது. தில்லி திகார் சிறையில் உள்ள அவரை,  தென் மாநிலங்களில் உள்ள கொச்சி, கோவை அல்லதுபெங்களூரு என ஏதாவது ஒரு சிறைக்கு மாற்ற வேண்டும். அவரை வேறு சிறைக்கு மாற்றினால் விசாரணையை எதிர்கொள்ளவும், அவரது குடும்பத்தினர் சந்திக்கவும் உதவியாக இருக்கும்' எனக் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை  நீதிபதி  தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர்,  டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, மனு மீது பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai