Enable Javscript for better performance
நாட்டில் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் கீர்த்தி நகர் காவல் நிலையம்!- Dinamani

சுடச்சுட

    

    நாட்டில் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் கீர்த்தி நகர் காவல் நிலையம்!

    By DIN  |   Published on : 09th January 2018 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலில் தில்லியிலுள்ள கீர்த்தி நகர் காவல் நிலையம் இடம்பிடித்துள்ளது.
    மத்தியப் பிரதேச மாநிலம், டேக்கன்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபிக்கள்) மாநாட்டில், நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
    குற்றங்களைத் தடுப்பது, மக்களுக்கு சேவையாற்றுவது, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட 80 அம்சங்களைக் கணக்கிட்டு, இந்த காவல் நிலையங்களை மத்திய அரசு தேர்வு செய்திருக்கிறது. மொத்தம் 14,850 காவல் நிலையங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட இப்பட்டியலில், தமிழகத்தின் கோவை நகரிலுள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
    அடுத்தடுத்த இடங்களில், ஹைதராபாதிலுள்ள பஞ்சகுட்டா காவல் நிலையம்,  லக்னௌவிலுள்ள குடாம்பா காவல் நிலையம், ஜல்பைகுரியிலுள்ள தூப்குரி காவல் நிலையம், சென்னையிலுள்ள கே.4 காவல் நிலையம் ஆகியவை உள்ளன.  6 முதல் 9 வரையிலான இடங்களில் நைனிடால், மெயின்புரி, டேராடூன், கண்ணூர் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்கள் உள்ளன. 10-ஆவது இடத்தை, தில்லியிலுள்ள கீர்த்தி நகர் காவல் நிலையம் பெற்றுள்ளது.
    சிறப்புகள் என்னென்ன?: இதுதொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள கீர்த்தி நகர் காவல் நிலைய அதிகாரிகள், தங்களது காவல் நிலையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கூறியதாவது:
    கீர்த்தி நகர் காவல் நிலையத்துக்கென தனியாக  அதிகாரப்பூர்வ வலைதளம் உள்ளது. இதில், ஆய்வாளர் முதல் கடைநிலை காவலர் வரை அனைவரின் பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் தூய்மை மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், புகார்தாரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். 
    இதன் மூலம் 300 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். எங்களது காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் முதியோர் தனியாக வசிக்கும் வீடுகளில் அலாரம் வசதியை  ஏற்படுத்தியுள்ளோம். காவல் நிலைய வளாகத்தில் பாட்மிண்டன் மைதானமும், குற்றவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்கள் கொண்ட நூலகமும் உள்ளது. காவல் துறை தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் பொதுமக்கள் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். 
    இதேபோல், காணாமல் போனோர் குறித்து புகார் அளிப்பது, திருடப்பட்ட வாகனங்களின் நிலையை அறிந்து கொள்வது என பல்வேறு சேவைகளை இணையவழியிலேயே பொதுமக்கள் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீர்த்தி நகர் காவல் நிலையத்தின் சிறப்பம்சங்கள்...
    1.    பிரத்யேக வலைதளம்
    2.    இணையவழியில் காவல் துறை சேவைகள் வழங்கல்
    3.    ஆய்வாளர் முதல் கடைநிலை காவலர் வரை அனைவரின் விவரங்கள் வெளியீடு
    4.    மிகச் சிறப்பான உள்கட்டமைப்பு வசதி 
    5.    வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பு
    6.    முதியோர் தனியாக வசிக்கும் வீடுகளில் அலாரம் வசதி
    7.    பாட்மிண்டன் மைதானம், நூலகம்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai