Enable Javscript for better performance
மேக்ஸ் மருத்துவமனை வழக்கு:  காவல்துறை நிலவர அறிக்கை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மேக்ஸ் மருத்துவமனை வழக்கு:  காவல்துறை நிலவர அறிக்கை தாக்கல்

    By DIN  |   Published on : 09th January 2018 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.
    இதுகுறித்த விவரம் வருமாறு: வடமேற்கு தில்லி,  ஷாலிமார் பாக்கில் உள்ள மேக்ஸ்  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட  பஸ்சிம் விஹாரைச் சேர்ந்த வர்ஷா என்ற பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்ததாக நவம்பர் 30-ஆம் தேதி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர், இரு குழந்தைகளையும் பாலித்தீன் பையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
    இந்நிலையில், மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு  குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, அக்குழந்தையை பீதம்புரா மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.  சில தினங்களுக்குப் பிறகு அக்குழந்தையும் இறந்தது. இதனிடையே,  தவறிழைத்ததாக  மேக்ஸ் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனையின்  உரிமம் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு டிசம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது.  உரிமம் ரத்து செய்யப்பட்ட மேக்ஸ் மருத்துவமனை  உரிய  மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை டிசம்பர் 20-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
    இந்நிலையில்,  உயிரிழந்த குழந்தைகளின் தந்தை ஆஷிஷ் குமார் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனை மீதான வழக்கு விசாரணையை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும்,   விசாரணை குறித்த தகவல்களை வழக்கை விசாரித்து வரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அதிகாரி பகிர்வதற்கு  உத்தரவிடவும்,   நிலவர அறிக்கையின் நகலையும் வழங்க உத்தரவிடவும் வேண்டும் என்று கோரியிருந்தார்.  இது குறித்து ஆஷிஷ் குமார் கூறுகையில், "இந்த விவகாரத்தில் போலீஸார்  வழக்குப் பதிவு செய்வதற்கு 20 மணி நேரம் தாமதமானது.  இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோயிருக்கிறோம்' என்றார்.
    இந்நிலையில், இந்த விவகாரத்தில் தில்லி போலீஸார் மேற்கொண்ட  விசாரணை தொடர்புடைய நிலவர அறிக்கை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தலைமைப் பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் மாலிக், "காவல் துறை விசாரணை அதிகாரியால் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு,  பதிவு செய்யப்பட்டுள்ளது.  
    தில்லி மருத்துவக் கவுன்சிலிடமிருந்து அறிக்கை வர வேண்டி  உள்ளதாக  விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.  இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கின் விசாரணையை அனைத்துக் கோணங்களிலும் விசாரணை அதிகாரி விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
    முன்னதாக,  நீதிமன்ற விசாரணையின்போது போலீஸ் தரப்பில், "மேக்ஸ் மருத்துவமனையின் இறப்பு பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது,  சம்பந்தப்பட்ட குழந்தைகள் பிறந்த நேரம் மட்டும் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகள் இறந்த நேரம் பதிவு செய்யப்படவில்லை.  
    முதல் தகவல் அறிக்கையின் நகல் தில்லி மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுடைய கருத்து கோரப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.  இறந்த குழந்தைகளுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நுண்திசுக்கூறியியல் துறையிடம் இருந்து இறுதி கருத்து வந்த பிறகு இறப்புக்கான காரணம் குறித்து இறுதி அறிக்கையில் உறுதிப்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,  இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai