Enable Javscript for better performance
ரயான் பள்ளி சிறுவன் கொலை வழக்கு: 16 வயது மாணவனுக்கு ஜாமீன் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரயான் பள்ளி சிறுவன் கொலை வழக்கு: 16 வயது மாணவனுக்கு ஜாமீன் மறுப்பு

    By DIN  |   Published on : 09th January 2018 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதே பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த பிரத்யும்னன் தாக்கூர் (7) என்ற மாணவன், அப்பள்ளியின் கழிப்பறையில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டான். இதுதொடர்பான வழக்கை முதலில் விசாரித்த காவல்துறையினர், அப்பள்ளியின் பேருந்தில் உதவியாளராக  பணியாற்றி வந்த அசோக் குமார் என்பவரை கைது செய்தனர். சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் முயற்சியில் அவனை அசோக் குமார் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
    இதனிடையே, இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும் முரண்பாடுகளும் உள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஹரியாணா முதல்வருக்கு பிரத்யும்னனின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால், மாணவன் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
    திடீர் திருப்பம்: இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் ஒருவனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கத்தில் பிரத்யும்னனை அந்த மாணவன் கொலை செய்ததாக தெரிவித்த சிபிஐ அதிகாரிகள், காவல்துறையினரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அசோக் குமாருக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறினர்.
    இதனிடையே, கைதான மாணவனுக்கு ஜாமீன் கோரி, சிறார் நீதி ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நிராகரித்த சிறார் நீதி ஆணையம், மாணவனை பெரிய நபராக கருதி விசாரணை மேற்கொள்ளும்படி சிபிஐ-க்கு கடந்த மாதம் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
    இதையடுத்து, ஜாமீன் கோரி, குருகிராம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாணவனின் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டத்தின்படி 30 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று மாணவனின் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
    ஆனால், அந்த மாணவனை பெரிய நபராக சிறார் நீதி ஆணையம் உறுதி செய்துவிட்டதால், 90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தால் போதுமானது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜஸ்பீர் சிங் குண்டு, மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார். இந்நிலையில், மாணவனின் ஜாமீன் மனுவை நிராகரித்து, நீதிபதி  திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai