Enable Javscript for better performance
ஐடிபிஓ வளாக சீரமைப்புத் திட்ட ஊழல் வழக்கு:  தனியார் நிறுவன மேலாண் இயக்குநருக்கு ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    ஐடிபிஓ வளாக சீரமைப்புத் திட்ட ஊழல் வழக்கு:  தனியார் நிறுவன மேலாண் இயக்குநருக்கு ஜாமீன்

    By DIN  |   Published on : 10th January 2018 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பிரகதி மைதானில் உள்ள இந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனத்தின் (ஐடிபிஓ) வளாக சீரமைப்புத் திட்ட  ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு சாரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
    தில்லி பிரகதி மைதானில் உள்ள ஐடிபிஓ வளாகத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டது. தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனம் (என்பிசிசி) மூலம்  ரூ.2,149.93 கோடியில்  இத்திட்டம்  மேற்கொள்ளப்பட்டது. 
    இத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது,  லஞ்சம் பெற்றதாக என்பிசிசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அனூப் மிட்டல்,  கெபாசைட் ஸ்டிரக்சர்ஸ்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் குல்கர்னி,  இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் ரிஷப் அக்ரவால்,  அரசு அதிகாரிகள் பிரதீப் மிஸ்ரா, ஆகாஷ்தீப் சௌகான் ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. 
    இது தொடர்பான சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்)  திட்டத்தின் ஒப்பந்தங்களை என்பிசிசி நிறுவனம் ஷபூர்ஜி பல்லோன்ஜி அண்ட் கம்பெனி லிமிடெட்,  ஷபூர்ஜி பல்லோன்ஜி கட்டார் டபிள்யூஎல்எல் நிறுவனம் ஆகியவற்றுக்கு  வழங்கியதாகவும்,   ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்திடமிருந்து துணை ஒப்பந்த அடிப்படையில் அந்தப் பணியைப் பெறுவதற்கு மும்பையைச் சேர்ந்த கெபாசைட் ஸ்டிரக்சர்ஸ் நிறுவனம் முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
    மேலும்,  துணை ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக கெபாசைட்  ஸ்டிரக்சர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குல்கர்னி, அரசு ஊழியர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த ரிஷப் அக்ரவாலை அணுகியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. 
    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி,  குற்றம்சாட்டப்பட்ட குல்கர்னி,  அக்ர்வால் ஆகியோர்  தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இம் மனு மீது சிபிஐ மற்றும் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 
    இதைத் தொடர்ந்து,  ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.
    இந்நிலையில்,  இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் ரிஷப் அக்ரவாலுக்கு நீதிமன்றம்  திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கெபாசைட் ஸ்டிரக்சர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் குர்கர்னியை ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும், அதே தொகைக்கு உத்தரவாதமும் அளித்து தனி நபர் ஜாமீனில் விடுவித்து   சிறப்பு நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார் உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai