Enable Javscript for better performance
புத்தகக் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவரும் "சுற்றுச் சூழலியல் அரங்கு'- Dinamani

சுடச்சுட

    

    புத்தகக் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவரும் "சுற்றுச் சூழலியல் அரங்கு'

    By DIN  |   Published on : 10th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி உலக புத்தகக் கண்காட்சியில் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சூழலியல் அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
    26- ஆவது புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி பிரகதி மைதானில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. "சுற்றுச் சூழலும் பருவநிலை மாற்றமும்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு  ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நேஷனல் புக் ட்ரஸ்ட் சார்பில் சுற்றுச் சூழலியல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு சுற்றுச் சூழலியல், பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவை தொடர்பாக அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட முக்கியமான புத்தகங்கள்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஆதி வள்ளியப்பன் எழுதிய "மனிதனுக்குத் தோழனடி', "சிட்டு',  ஏ. சண்முகானந்தம் எழுதிய "தமிழகத்தின் இரவாடிகள்', வாங்கரி மாத்தாய் எழுதிய "மாற்றத்துக்கான பெண்கள்' (மொழிபெயர்புப் புத்தகம்), வழக்குரைஞர் சுந்தர்ராஜன் எழுதிய "சுற்றுச் சூழல் - பிரச்னைகளும் சட்டத் தீர்வுகளும்', கோவை சதாசிவம் எழுதிய "ஆதியில் யானைகள் இருந்தன', நக்கீரன் எழுதிய "அலையாத்திக் காடுகளும் அனல் மின் நிலையங்களும்'  போன்ற தமிழில் சூழலியல் தொடர்பாக எழுதப்பட்ட பல  முக்கியமான  புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை  தமிழ் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
    இது தொடர்பாக நேஷனல் புக் டிரஸ்டின் இணை இயக்குநர் நீரா ஜெயின் கூறியதாவது: சூழலியல் தொடர்பாக அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள முக்கியமான புத்தகங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளோம்.   இதேபோல, இந்திய மொழிகளிலும்,  பிற நாட்டு மொழிகளிலும் சூழலியல் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
    மேலும்,  பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக பல மொழிகளிலும் வெளியான ஆவணப் படங்கள் தினம்தோறும் இந்த அரங்கில் திரையிடப்படுகின்றன.  தினமும்  பிரபல சூழலியலாளர் இந்த அரங்கில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன் மக்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
    நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:  இந்த அரங்கம் முழுக்க முழுக்க  சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.  மூங்கில் பிரம்பு, சவுக்கு ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.  
    இந்தியாவில் வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்ட சூழலியல் திட்டங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
    மேலும், சூழலியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் தினம்தோறும் மாலையில் நடைபெறுகின்றன.  வட கிழக்கு  மாநிலங்களின் நாட்டார் பாடல்கள்  "கோயில் காடு'களின் பெருமையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டின் சில நாட்டார் பாடல்கள் அலையாத்திக் காடுகளின் பெருமையைச் சொல்கின்றன. இதுபோன்ற பாரம்பரிய இசை, நடனங்களை இந்த அரங்கில் தினமும் நடத்துகிறோம்.  இதன் மூலம், சூழலைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து  மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai