Enable Javscript for better performance
போலீஸ் கமாண்டோக்களுக்கான போட்டி ஜன.13-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் கமாண்டோக்களுக்கான பல்வேறு போட்டிகள்  குருகிராம் அருகே உள்ள மானேசரில்  சனிக்கிழமை (ஜனவரி 13)  தொடங்கவுள்ளது.
     இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40 கமாண்டோ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    அகில இந்திய போலீஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் (ஏ.ஐ.பி.எஸ்.சி.பி.)  போலீஸ் கமாண்டோக்களுக்கான போட்டி கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 
    இப்போட்டியில் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் கமாண்டோக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    இப்போட்டி தொடர்பான   பாலம் என்.எஸ்.ஜி. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்  அதன் இயக்குநர் ஜெனரல் சுதிர் பிரதாப் சிங் கூறியதாவது: 
    போலீஸ் கமாண்டோக்களின் உடல்,  மன ஆரோக்கியத்தைப் பேணவும்,  துப்பாக்கியில் சுடும் திறனை வளர்க்கவும் அவர்களுக்கு இப்போட்டிகள் உதவியாக இருக்கும். 
    இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் இறுக்கமான சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளப் பழகிக் கொள்வர். 
    இதனால், வீரர்களின் கூட்டு முயற்சி அதிகரிக்கும்.  இந்த முறை,  சினைப்பர் சுடும் போட்டி இடம்பெற்றுள்ளது.  
    இங்கே சிறப்பாக செயல்படும் சினைப்பர் வீரர்களை தீவிரவாதிகளை அழிக்க பயன்படுத்துவது தொடர்பாக விவாதித்து வருகிறோம் என்றார் அவர்.  
    இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் உள்பட 25 அணிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. இப்போட்டிக்காக 55 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டியை நடத்த 22 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அணியில் 40 வீரர்கள்
    கேப்டன் ஹாஷிஸ் தலைமையில் 40 பேர் கொண்ட தமிழ்நாடு அணி இப்போட்டியில் கலந்து கொள்கிறது. 
    2014- இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற நான்காவது அகில இந்திய போலீஸ் கமாண்டோ போட்டியில் தமிழ்நாடு  அணி வெற்றி பெற்றது. 
    இந்த ஆண்டு 40 வீரர்களைக் கொண்ட அணி களமிறங்குகிறது. வெற்றி பெறக் கடுமையாக உழைப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai