Enable Javscript for better performance
அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில்  பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில்  பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 11th January 2018 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில், பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகி விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
    ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவு செய்தது. 
    இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்திப் பொருள்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில்,  30 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்திய மூலப்பொருள்களைப் பயன்படுத்தாமல், 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதிலிருந்து பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகி விட்டது.
    100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்ததன் மூலம், உள்நாட்டு உற்பத்தித் துறையினருக்கும், வர்த்தகர்களுக்கும் பிரதமர் மோடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள், இனி மத்திய அரசின் ஒப்புதலின்றி, இந்தியாவில் ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகத்தைத் தொடங்க முடியும்.
    பொருளாதார வீழ்ச்சி: நாட்டின் பொருளாதாரம், கடந்த 4 ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து விட்டது. கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2017-18-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். பிரதமர் மோடி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்றார் அவர்.
    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்திலேயே, சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. அதில், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்ற திருத்தம் மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai