Enable Javscript for better performance
ஏழைகள் வாங்கக் கூடிய விலையில் மருந்துகள்: உற்பத்தி நிறுவனங்களுக்கு தில்லி அமைச்சர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஏழைகள் வாங்கக் கூடிய விலையில் மருந்துகள்: உற்பத்தி நிறுவனங்களுக்கு தில்லி அமைச்சர் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th January 2018 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழை மக்கள் வாங்கக் கூடிய  விலையில் மருந்துகள் தங்குதடையின்றி கிடைப்பதை  உறுதி செய்ய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவுறுத்தினார்.  மேலும், மருந்துகளின் மீது அதிகபட்ச  சில்லறை விலையை  அரை மடங்குக்கு மேல் அதிகமாக நிர்ணயிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    "மருந்துப் பொருள்களின் வசதி,  இருப்பு,  கட்டுப்படியாகும் விலை' எனும் தலைப்பிலான பயிலரங்கம்,  தில்லி ஃபிக்கி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை,  தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையகம் (என்பிபிஏ),   ஃபிக்கி ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தில்லி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடங்கிவைத்தார்.  அப்போது அவர் பேசியதாவது:
    அதிக லாபம் வசூல்: மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு வாங்கும் விலையில் மருந்துகள் கிடைப்பதை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.  மருந்துகளின் விலைகள் தற்போது மிகவும் அதிகமாக உள்ளன.  அனைத்து மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையானது அடக்கவிலையின் அரை மடங்குக்கு அதிகமாக நிர்ணயிக்கக் கூடாது.   அதாவது,  ரூ.10 விலையுள்ள மருந்து வெளிச்சந்தையில் ரூ.15 விலையில் மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு மேல் விலை நிர்ணயிக்கக் கூடாது. மருந்து விற்பனையின் போது சில சமயங்களில் 900 சதவீதம் முதல் 2000 சதவீதம் வரை லாபம் வசூலிக்கப்படுகிறது.  
    என்எல்இம் கட்டாயம்: நோயாளிகளுக்கு தேசிய அத்தியாவசிய மருந்துகள்  பட்டியலில் (என்எல்இஎம்) உள்ள   மருந்துகளை மட்டுமே எழுதுவதை கட்டாயமாக்கும் உத்தரவை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு தில்லி அரசு  விரைவில் பிறப்பிக்க உள்ளது.  ஏழைகள், பணக்காரர்கள் ஆகிய தரப்பினருக்கும் அனைத்து வகையான மருந்துகளையும் இலவசமாக வழங்குவதை தில்லி அரசு உறுதிப்படுத்தும். 
    நோய்களுக்கு சிகிச்சை பெற வருவோருக்கு மருந்துகளை வழங்கும் போது ஏழைகள், பணக்காரர்கள் என்று அரசு வேறுபடுத்தி பார்க்க முடியாது.  அரசுக்கு வரி செலுத்தும் பணக்காரர்களின் வரிப் பணத்தில் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்யும் போது அவர்கள் சிகிச்சைக்கு வரும் போது மருந்துகள் வழங்குவதை எப்படி அரசால் மறுக்க முடியும். 
    மொஹல்லா கிளினிக்: அரசின் மொஹல்லா கிளினிக்குகளில் ஏழைகளுக்கு 212 வகையான பரிசோதனை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச மருந்துகள், பரிசோதனைகள் உறுதிப்படுத்தப்படும்.  மருத்துவர்கள், உறைவிட மருத்துவர்கள், செவிலியர்களின் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக தங்களது குரலையும் உயர்த்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார் சத்யேந்தர் ஜெயின்.
    பொதுவான மருந்துகள்: மத்திய மருந்து உற்பத்தி துறை இணைச் செயலர் சுஷான்ஸ் பந்த் பேசுகையில், "கட்டுபடியான விலையில்  பொதுவான மருந்துகள் கிடைக்கும் மருந்துக் கடைகளை அதிகளவில் திறக்க வேண்டும்.  நாட்டில் 2016-ஆம் ஆண்டில் பொது மருந்துகள் விற்பனையகங்கள் 270 இருந்தன.  தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  தில்லியில் மட்டும் இதுபோன்று 38 பொதுசார் மருந்துக்  கடைகள் உள்ளன' என்றார். 
    இந்தப் பயிலரங்கில் என்பிபிஏ தலைவர் பூபீந்தர் சிங்,  தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் யதுவன்ஷி,  மருந்துகள் கட்டுப்பாட்டாளர் எஸ்.என். மிஸ்ரா உள்பட பலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் தில்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள்,  மருந்துக் கடைகள் சங்கம், நுகர்வோர் அமைப்புகள்,  தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள்,  ஃபார்மஷி கல்லூரிகளின் முதுகலை மாணவர்கள் உள்பட  பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai