Enable Javscript for better performance
சிறையில் இருந்து விடுவிக்கக் கோரிய மாதையனின் மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    சிறையில் இருந்து விடுவிக்கக் கோரிய மாதையனின் மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 11th January 2018 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறையில் இருந்து விடுவிக்கக்  கோரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன். இவர் கொலை வழக்கு ஒன்றில் கீழமை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்தும்,  தனக்கு வழங்கப்பட்ட தண்டணையைக் குறைக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதையன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
    இந்நிலையில்,  2017, நவம்பர் 23-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாதையன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் 20 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் தன்னை சிறையில் இருந்து விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட  வேண்டும் என்றும் கோரியிருந்தார். 
    இந்த மனு தொடர்பான முந்தைய விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, "மனுதாரர் மாதையனின் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும் கோரிக்கையை  ஏற்கெனவே ஆயுள்தண்டனை கைதிகளுக்கான விசாரணை மற்றும் பரிந்துரை வாரியம் நிராகரித்து விட்டது. இதனால்தான்,  அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவும் பிறப்பிக்க உள்ளது' என்று வாதிட்டிருந்தார்.  
    இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து,  அது தொடர்பான தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
    இந்நிலையில்,  மாதையன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  உச்ச நீதிமன்றம் கூறியபடி நான்கு வார காலத்தில்  தமிழக அரசு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர்,  டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆஜராகி, "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி  தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பித்து, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது' என்று தெரிவித்தார்.  
    அதையேற்றுக் கொண்ட  நீதிபதிகள் அமர்வு,  மனுதாரர் மாதையனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai