Enable Javscript for better performance
தம்பதியிடம் துப்பாக்கிமுனையில் நகை, பணம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி, மது விஹாரில் முதிய தம்பதியரின் வீட்டில் நுழைந்து துப்பாக்கி முனையில் 290 கிராம்  தங்க நகைகள்,  ரூ.80 ஆயிரம்  ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: மது விஹாரில் குருத்வாரா ரோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் விரேந்தர் குமார் பிண்டால (70).   இவர் சாவ்ரி பஜாரில் இரும்புச் சாமான்கள் கடை வைத்துள்ளார்.  
    இவர் வழக்கம்போல திங்கள்கிழமை கடையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு மாலை 6 மணியளவில்  திரும்பினார்.  
    முன்னதாக ப்ரீத் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் வந்தார். அப்போது 20-25 மதிக்கத்தக்க நால்வர் அவரைப் பின் தொடர்ந்து வந்ததைக் கண்டுள்ளார்.
    குடியிருப்புக்கு வந்ததும் இரண்டாவது தளத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.  அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களில் இருவர் துப்பாக்கியுடன் விரேந்தர் குமாரின் வீட்டினுள் நுழைந்தனர்.  பின்னர் விரேந்தர் குமாரையும், அவரது மனைவி ஜெய்மாலாவையும் துப்பாக்கியைக் காட்டி பெட்டகத்தின் சாவியை கொடுக்கும்படி  மிரட்டினர். சப்தம் போட்டால் கொன்றுவிடுவதாகவும் கூறினர். 
    இதைத் தொடர்ந்து,  மற்ற இருவர்  படுக்கை அறையில் இருந்த அலமாரியில் பொருள்களைத் தேடினர். அங்கிருந்து 290 கிராம் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். அப்போது,  விரேந்தர் குமார் பிண்டாலை ஒருவர்  துப்பாக்கியால் தாக்கினார். மேலும், தம்பதியினரை கை, கால்களை வீட்டில் இருந்த பழைய துணியைக் கொண்டு கட்டிப்போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
    மிகுந்த போராட்டத்துக்கு பிறகு கட்டை அவிழ்த்த விரேந்தர் குமார், பின்னர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 
    மேலும்,  விரேந்தர் குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் வகையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai