Enable Javscript for better performance
தில்லி சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்களுக்கு வாய்ப்பு: பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி உறுதி- Dinamani

சுடச்சுட

  

  தில்லி சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்களுக்கு வாய்ப்பு: பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி உறுதி

  By எம்.அருளினியன்  |   Published on : 11th January 2018 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில், அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று  அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி உறுதி அளித்தார்.
  தில்லியில் ஆம் ஆத்மி அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, ஆளுநரின் ஆய்வுகள், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை, தில்லி அரசியலில் தமிழ் மக்களின் பங்கு ஆகியவை தொடர்பாக அவர் "தினமணி'க்கு அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:
  தில்லி வாழ் தென்னிந்திய மக்கள் குறிப்பாக தில்லிவாழ் தமிழ் மக்கள்  தொடர்சியாக பாஜகவுக்கு  ஆதரவளித்து வருகின்றனர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில்  பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு  தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தில்லியில் தனியாக தென் இந்தியப் பிரிவை வைத்துள்ள ஒரே கட்சி பாஜகதான். பாஜகவின் தென் இந்தியப் பிரிவின் தலைவராக தமிழர் ஒருவரையே நியமித்துள்ளோம்.
  கொள்ளை அடிக்கும் அதிகார வர்க்கம்:  தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்து  3 ஆண்டுகளில்  தலைநகர் முழுவதுமாக நிலைகுலைந்து விட்டது. வெகுஜன மக்களின் கட்சி என்ற அந்தஸ்தை ஆம் ஆத்மி இழந்துவிட்டது. ஆம் ஆத்மியின் அதிகார வர்கத்தினர் பணத்துக்கு விலை போய் விட்டனர். கேஜரிவால் எல்லாவற்றிலும் அரசியல் செய்து தில்லி மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கிறார். கேஜரிவாலை தேர்ந்தெடுத்ததற்காக மக்கள் தினம்தோறும் வருந்திக் கொண்டிருக்கின்றனர். 
  கேஜரிவாலின் ஈகோ: கேஜரிவால் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னுடைய சொந்தக் கட்சியினரையும் அவர் ஏமாற்றியுள்ளார். மாநிலங்களவைக்கு நியமிக்க ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஒருவர் கூடவா கிடைக்கவில்லை? ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அழைத்து, கேஜரிவால் முதல்வராக நீடிக்க வேண்டுமா என மனச்சாட்சிப்படி கூறுங்கள் எனக் கேட்டால்,  பெரும்பாலானோர் "கேஜரிவால் வேண்டாம்' என்றுதான் கூறுவர். கேஜரிவால் போன்ற ஈகோ பிடித்த முதல்வரை தில்லி மக்கள் இதுவரை கண்டதில்லை. 
  அங்கீகாரமற் காலனிகள்: தில்லியின் மிகப் பெரிய பிரச்னை அங்கீகாரமற்ற காலனிகள்தான். சுமார் 15 ஆண்டுகளாக,   அங்கீகாரமற்ற  காலனிகளை சட்ட அங்கீகாரம் உள்ள காலனிகளாக மாற்றப்போவதாக தில்லியை முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்  ஷீலா தீக்ஷித் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அப்படி செய்யவில்லை. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அதே புராணத்தை கேஜரிவால் அரசும் பாடி வருகிறது. ஆனால், எவ்வித முன்னேற்றமும் இல்லை.  அங்கீகாரமற்ற காலனிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்காமல் தில்லியின் வளர்ச்சி குறித்துப் பேசுவதில் அர்த்தம் இல்லை. அடுத்த தேர்தலில்  பா.ஜ.க. வெற்றி பெற்று  நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.
  சேரிப் பகுதி மக்களின் துயரம்:  பாஜக தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து பல நாள்கள் சேரிப் பகுதிகளுக்குச்  சென்று அம்மக்களுடன் தங்கியுள்ளேன். அங்கே கழிவறைகள், சுத்தமான குடிநீர் கிடையாது. கடும் குளிர், கடுமையான வெயில் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  குடிநீர் மீட்டர் இல்லாத அவர்களுக்கு 20,000 லீட்டர் குடிநீர் இலவசமாகக் கொடுக்கிறோம் என ஆம் ஆத்மி கூறுவது  நகைச்சுவையாக உள்ளது.
  மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதையே கேஜரிவால் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளார்.  மத்திய அரசை தனது மிகப் பெரிய எதிரியாகவும் பார்க்கிறார். உண்மையில், கேஜரிவாலுக்கு மிகப் பெரிய எதிரி அவரேதான்.  தனது தவறுகளை மத்திய அரசு மீதும், துணைநிலை ஆளுநர் மீதும் சுமத்திவிட்டு,  தான் தப்பிக்க முயல்கிறார். 
  ஆளுநர் ஆய்வுகள்:  ஆளுநர், துணைநிலை ஆளுநர் ஆகியோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்படுபவர்கள். அவர்களைக் குறை சொல்வது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் குறை சொல்வதற்கு சமமானது. துணைநிலை ஆளுநர் தொடர்பாக ஆம் ஆத்மி சொல்லும் குற்றச்சாட்டுகள் பலவற்றுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. உண்மையில், மக்கள் பணிகளைச் சரிவரச் செய்யாத ஆம் ஆத்மி அரசு மீதுதான் துணைநிலை ஆளுநர் புகார் சொல்ல வேண்டும். அரசு தவறு செய்தால் ஆளுநர் தலையிடத்தான் செய்வார். கேஜரிவால் ஆளுநரை எதிரியைப் போலப் பார்க்கிறார்.  தமிழகத்திலும், தில்லியிலும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உடன்பட்டே ஆளுநர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் பாஜக ஆட்சி செலுத்த முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில்  உண்மை இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

  "ரஜினியால் மாற்றத்தை கொண்டு வர முடியும்'
  புதிதாக அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்தால் தமிழகத்தில் நிச்சம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது நான்அதிகளவு சந்தோஷப்பட்டேன்.  அவர் மட்டுமல்ல எந்தவொரு கலைஞரும் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். 
  ஏனென்றால்,  கலைஞர்களால் மக்களுக்குத் துரோகம் செய்ய முடியாது. நிச்சயமாக ரஜனியால் தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புகிறேன். ரஜினி - பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா என்பதை பாஜக தலைமையே சொல்ல வேண்டும்  என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai