Enable Javscript for better performance
சில்லறை வர்த்தகத்தில்100% அந்நிய நேரடி முதலீடு: அனைத்துத் தரப்பினருடன் ஜன.16-இல் சிஏஐடி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    சில்லறை வர்த்தகத்தில்100% அந்நிய நேரடி முதலீடு: அனைத்துத் தரப்பினருடன் ஜன.16-இல் சிஏஐடி ஆலோசனை

    By DIN  |   Published on : 12th January 2018 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், எதிர்கால உத்திகளை வகுப்பது தொடர்பாக தில்லியில் ஜனவரி 16-ஆம் தேதி அனைத்து தொழில் துறையினர் பங்கேற்கும் கூட்டத்தை கூட்ட  உள்ளதாக  அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசியத் தலைவர் பி.சி. பார்ஷியா,  செக்ரட்டரி ஜெனரல் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்டு) சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் நேரடி அந்நிய நேரடி முதலீட்டை   அனுமதிக்கும்  மத்திய அரசின் நடவடிக்கை சிறு வியாபாரிகளை கடுமையாகப் பாதிக்கும்.   
    இந்த நடவடிக்கை பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தக சந்தை மீது மேலாதிக்கம் செய்ய வழியேற்படுத்திவிடும்.  மேலும்,  உள்நாட்டு வர்த்தகத்தையும் பாதிக்கும்.  நாட்டின் தற்போதைய சில்லறை வர்த்தகத்தின் மீதான பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 
    இந்த விஷயத்தில் எதிர்கால உத்திகளை வகுக்கும் வகையில் விவசாயிகள்,  கூவி விற்போர்,  போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள்,  சிறு தொழில் துறையினர்,  நுகர்வோர்கள்,  சுய வேலைவாய்ப்பு குழுக்கள், பெண் தொழில்முனைவோர் உள்பட சில்லறை வர்த்தகத்தில் தொடர்புடைய பல்வேறு முன்னணி சங்கங்களின் கூட்டம் வரும் ஜனவரி 16-ஆம் தேதி தில்லியில் சிஏஐடி சார்பில் கூட்டப்பட உள்ளது.
     ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதிக்கும்  மத்திய அரசின் முடிவானது,  உள்நாட்டு தயாரிப்புத் துறையில் கடுமையான   பாதிப்பை ஏற்படுத்தி விடும்.  மேலும், "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.  வெளிநாட்டு நிறுவனங்களின் இலச்சினைகள் உள்நாட்டு சந்தையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.   மத்திய அரசின் இந்த நடவடிக்கை,  பல இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துவிடும்.  அரசால் வேலைவாய்ப்பு அளிக்க முடியவில்லை.  
    சுய வேலைவாய்ப்புதான் வருவாய்க்கான ஒரே ஆதாரமாக இருந்து வருகிறது.  சில்லறை வர்த்தகம் மூலம் படித்த, படிக்காத,  கிராமப்புற அல்லது நகர்ப்புற மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai