Enable Javscript for better performance
சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில், கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன்  மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
    இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் எனக் கூறப்படும் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் நான்கு நாள்கள் விசாரணைக்குப் பிறகு டி.டி.வி. தினகரனும் ஏப்ரல் 26-இல் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கில் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து, தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக  குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை பதிவு செய்தது.  இந்த வழக்கில் தினகரன் உள்ளிட்ட நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    சுகேஷ் சந்திரசேகர் தில்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி  தில்லி விசாரணை நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டன.    தில்லி உயர் நீதிமன்றத்தில்   சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம்,  விசாரித்தது.  அப்போது, அவரிடமிருந்து  மாநிலங்களவை உறுப்பினருக்கான போலி அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே, விசாரணை நீதிமன்றத்தில் போலீஸார் ஜூலை 14-இல் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  மேலும்,  மோசடி செய்வதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர். 
    இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை சிறைஅதிகாரிகள் துன்புறுத்துவதாகக் கூறி தனியாக ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் சுகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.  இதை திகார் சிறை அதிகாரிகள் தரப்பு மறுத்ததுடன்,  தனகுக்கு ஜாமீன் பெறுவதற்காக சுகேஷ் சாதுர்யமாக பொய் கூறுவதாகத் தெரிவித்தனர். 
    இந்நிலையில்,  ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, சுகேஷுக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.  தில்லி காவல் துறையின் சார்பில்  கூடுதல் அரசு வழக்குரைஞர் ஹிரீன் சர்மா ஆஜராகி, "சுகேஷ் சந்திரசேகர் போலீஸ் காவலில் இருந்த போது அவருக்கு எதிராக கூடுதலாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீது மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அண்மையில் அவர் ரயிலிலும்,  விமானத்திலும் அழைத்துச் செல்லப்பபட வேண்டியிருந்தது. அவருடன் சென்ற 9 போலீஸார் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
    மேலும்,   உச்ச நீதிமன்ற நீதிபதி அலுவலகத்தில் இருந்து ஒருவர் பேசுவது போல,  அவர் சார்ந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதியிடம் தொடர்பு கொண்டு ஜாமீனில் விடுவிக்குமாறு சுகேஷ் பேசியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'  என்று வாதிட்டார்.
    சுகேஷ் சந்திரசேகர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சுதிர் நந்த்ர ஜோக்,  வழக்குரைஞர் ஆனந்த் பாண்டே ஆகியோர் ஆஜராகி, "இந்தக்  குற்றச்சாட்டில் தொடர்புள்ள டி.டி.வி. தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அதேபோன்று,  சுகேஷ்  விவகாரத்தில் சம்பந்தபட்ட போலீஸாரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  
    மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய டி.டி.வி. தினகரன்,  மல்லிகார்ஜுனா,  நாத்து சிங்,  லலித் குமார் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே,  அந்த அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று முறையிட்டனர்.
    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு சுகேஷ் சந்திரசேகரன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai