Enable Javscript for better performance
தில்லியில் கடந்த ஆண்டு குற்றங்கள் 12% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கடந்த 2017-ஆம்ஆண்டில் குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தில்லி காவல் துறையின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தில்லி என்டிஎம்சி கருத்தரங்க கூடத்தில் காவல் துறை ஆணையரின் வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டில் தில்லியில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
    அதன்படி, தில்லி காவல் துறையால் கடந்த ஆண்டு 2 லட்சத்து 23 ஆயிரத்து 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2016-இல் இதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 110 ஆக இருந்தது. அதாவது, 2016-ஆம் ஆண்டில் மொத்த இந்திய தண்டனைச் சட்ட குற்றங்கள் ஒரு லட்சம் பேருக்கு 1,137ஆக இருந்த நிலையில், 2017-இல் இது லட்சம் பேருக்கு 1,263 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-இல் குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 
    எனினும், பாலியல் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்கள் குறைந்திருப்பதாகவும், மோட்டார் வாகன திருட்டுகள் அதிகளவில் நிகழ்வது தொடர்வதாகவும், அதேபோன்று, திருட்டுப் போகும் வாகனங்களில் 50 சதவீதம் அளவு குடியிருப்புகள் பகுதிகளில் நிகழ்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளிப்படையாக பதிவு செய்ததாலும், சொத்து திருட்டுகள், மோட்டார் வாகனங்கள் திருட்டு ஆகியவை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதாலும், பெண்கள் தொடர்புடைய அனைத்துப் புகார்களும் பதிவு செய்யப்பட்டதாலும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என தில்லி காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
    பாலியல் வழக்குகளைப் பொருத்தமட்டில் 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-இல் 0.73 சதவீதம் குறைந்துள்ளது. கொலை வழக்குகள் 7.78 சதவீதமும், கொள்ளை வழக்குகள் 20 சதவீதமும் குறைந்துள்ளன. தில்லி போக்குவரத்துக் காவல் துறையினர் மூலம் கடந்த ஆண்டில் 60 லட்சத்து 10 ஆயிரத்து 772 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மொத்தம் ரூ.94.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    தில்லியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 0.9 சதவீதம் குறைந்துள்ளது. இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டது, விபத்துகள் குறித்து பகுப்பாய்வு செய்தது போன்றவையே இதற்குக் காரணம் என்று புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து தில்லி காவல் துறை ஆணையர் அமுல்ய பட்நாயக் கூறியதாவது: 
    குற்றங்கள் நிகழ்வதற்கு பொருளாதார வேற்றுமை முக்கியக் காரணியாக உள்ளது. அதே சமயத்தில், குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்திலும் குற்றங்களில் ஈடுபடும் நிலை உள்ளது. கடந்த ஆண்டில் பெண்கள் பாதுகாப்புக்கும், சாலைகளில் நிகழும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டிலும் அந்த விஷயங்களில் உரிய வகையில் கவனம் செலுத்தப்படும். அதேபோன்று, பயங்கரவாதச் செயல்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
    குற்றங்களைத் தடுக்க குறிப்பிட்ட பகுதிகளில் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்துவது, குற்றங்கள் நிகழும் பகுதியைக் கண்டறிவது போன்ற நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கொடூரக் குற்றங்கள் கடந்த ஆண்டில் 23.43 சதவீதம் குறைந்தது. அதேபோன்று, கொள்ளை, வழிப்பறி போன்ற தெருவோரக் குற்றங்கள் 21.05 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பெண்கள், மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது என்றார் அவர். 
    தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையர் (குற்றம்) ஆர்.பி. உபாத்யாயா கூறுகையில்,"2016-ஆம் ஆண்டில் 7,910 கொடூரக் குற்றங்கள் நிகழ்ந்ததாக புகார்கள் வரப்பெற்றன. 2017-இல் இந்த எண்ணிக்கை 6,057 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, 23.43 சதவீதம் குறைந்துள்ளது' என்றார்.

    வருடம்        வழக்குகளின் எண்ணிக்கை
    2016     1,99,110
    2017     2,23,075

    2017- ஆம் ஆண்டில்...
    பாலியல் வழக்குகள்    0.73 சதவீதம் குறைவு
    கொலை வழக்குகள்     7.78 சதவீதகுறைவு
    கொள்ளை வழக்குகள்     20 சதவீதம் குறைவு
    விபத்தில் உயிரிழந்தோர்    0.9 சதவீதம் குறைவு
    போக்குவரத்துக் காவல் துறை    60,10,772 பேருக்கு சலான்
    அபராதத் தொகை    ரூ.94.25 கோடி வசூல்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai