"தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் யமுனையை மீட்டெடுப்போம்'
By DIN | Published on : 12th January 2018 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அடுத்து வரவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைந்தால் யமுனை நிதியை மீட்டெடுப்போம் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
யமுனை நதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியது. யமுனை நதியை ஒட்டி தங்களது குடியேற்றங்களை மக்கள் அமைத்துக் கொண்டனர். ஆனால், தற்போது தில்லியில் ஒடும் யமுனை நதி அசுத்தமடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இல்லை. ஒரு காலத்தில் தில்லிவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த இந்த நதியை மீட்டெடுக்க வேண்டும். தில்லியில் நுழைவதற்கு முன்னும், தில்லியை தாண்டிச் செல்லும் போதும் யமுனை நதி சுத்தமானதாக உள்ளது. எனது தொகுதியான வட கிழக்கு தில்லியில் யமுனை நதியை மக்களின் உதவியுடன் சுத்தப்படுத்தினேன். திட்டமிட்டுச் செய்தால் யமுனையை சுத்தப்படுத்தலாம். அவ்வாறு செய்தால் தில்லியில் பல பசுமை வலயங்கள் உருவாகும். இதற்கு அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். யமுனையை ஒட்டிய பகுதிகளை பசுமை வலயங்களாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். யமுனை நதியை பாதுகாப்பதில் ஆம் ஆத்மி அரசுக்கு அக்கறை இல்லை.
ஆனால், எங்களிடம் யமுனை நதியை சுத்தப்படுத்துவதற்கான தெளிவான திட்டம் உள்ளது. நாங்கள் அடுத்த தடவை ஆட்சி அமைக்கும் போது அதை நடைமுறைப்படுத்துவோம் என்றார் அவர்.