Enable Javscript for better performance
"தூய்மை இந்தியா' தரப் பட்டியலில் இடம் பிடிக்க மாநகராட்சிகள் மும்முரம்!- Dinamani

சுடச்சுட

    

    "தூய்மை இந்தியா' தரப் பட்டியலில் இடம் பிடிக்க மாநகராட்சிகள் மும்முரம்!

    By DIN  |   Published on : 13th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில்  மிக விரைவில் ஆரம்பமாகவுள்ள தூய்மை இந்தியா கணக்கெடுப்பில்  இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    வடக்கு தில்லி மாநகராட்சி:  இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தூய்மை இந்தியா தரப் பட்டியலில் என்.டி.எம்.சி.,  279- ஆவது இடம் பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு பட்டியலில் முன்னணி பெற பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சுகாதாரம் தொடர்பாக  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.  தூய்மை இந்தியா செயலியை தரவிறக்கம் செய்து அதில் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளைப் பதிவு செய்வது தொடர்பாக மக்களை அறிவுறுத்தி வருகிறோம். செயலியில்  பதிவு செய்யப்படும் குறைகளுக்கு  12 மணி நேரத்தில் தீர்வு காணப்படும்.  
    மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள், முக்கியப் பொது இடங்கள் உள்ளிட்டவற்றில்  சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்றனர்.  
    தெற்கு தில்லி மாநகராட்சி:  இதுதொடர்பாக  தெங்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:   தூய்மை இந்தியா திட்டம் குறித்து பிரபலங்களை வைத்து சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தெற்கு தில்லி மாநகராட்சியின் சுகாதாரத்துக்கான விளம்பரத் தூதராக கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார். அண்மையில் நேரு பிளேஸ் பகுதியில் மின்னணு கழிவு சேகரிப்பு மேலாண்மை தொகுதியை அவர் திறந்து வைத்தார். இதுபோன்று  திடக்கழிவு சேகரிப்பு தொகுதிகளை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளோம் என்றனர்.
    கிழக்கு தில்லி மாநகராட்சி: கிழக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:   தூய்மை இந்தியா தரப் பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.  
    மாநகராட்சிப் பகுதிகளில்  ஈரமான குப்பைக சேகரிக்க பச்சை நிறத்திலும், உலர் குப்பைகளை சேகரிக்க நீல நிறத்திலுமான குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக குப்பைகளை பிரித்து சேகரிப்பதால் மீள் சுழற்சி இலகுவாகிறது என்றனர். 2017-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா தரப்பட்டியலில் வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சிகள் முறையே 279, 196, 202 ஆகிய இடங்களைப் பெற்றன. இதில் 4,300 நகரங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai