Enable Javscript for better performance
தெற்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்று திட்டங்களுக்கு யுடிடிஐபிஇசி அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்று திட்டங்களுக்கு யுடிடிஐபிஇசி அனுமதி

    By DIN  |   Published on : 13th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மூன்று திட்டங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மையம் (யுடிடிஐபிஇசி) அனுமதி அளித்துள்ளது.
    இதில் இரு திட்டங்கள் விமானம் நிலையத்திற்கான போக்குவரத்து தொடர்பு வசதியை மேம்படுத்தும். துவாரகாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள கண்காட்சி, கருத்தரங்க கூடம் அருகே சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக மற்றொரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
    இரு ஆண்டுளாக நிலுவையில் இருந்து வரும் வடக்கு மஹிபால்பூர் புறவெளிச்சாலை திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தலைமையிலான யுடிடிஐபிஇசி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தாமதமானது. இதனால், இத்திட்டம் மத்திய பொதுப் பணித் துறைக்கு 2017, நவம்பரில் மாற்றப்பட்டது. ரூ.188 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு 80 சதவீதம் நிதியை வழங்குவது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2016-ஆம் ஆண்டில் முடிவு செய்தது. தற்போது இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவியை அளிக்க உள்ளது.
    இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தின்படி, தெற்கு தில்லிக்கும் விமான நிலையத்திற்கும் இடையே இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் இரு மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் சுரங்கப்பாதை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் பயண நேரம் குறைந்துவிடும். அரவிந்தோ மார்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான திட்ட முன்மொழிவுக்கும் யுடிடிஐபிஇசி அனுமதி அளித்துள்ளது. அதிச்சினி டி-பாய்ன்ட் பகுதி அருகே சாலையில் அகலப்படுத்தும் பணியை பொதுப் பணித் துறை மேற்கொண்ட போதிலும், போக்குவரத்து இயக்கத்தை இலகுவாக்க வடிவியல் மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றார் அவர்.
    யுடிடிஐபிஇசி அதிகாரிகள் கூறுகையில், "அரவிந்தோ சௌக், அதிச்சினி டி-பாய்ன்ட், அந்தேரியா மோர் ஆகிய பகுதிகளில் நாற்சந்தி மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ள வேண்டும்' என்றனர். 
    அந்தரியா மோர் மற்றும் மஹிபால்பூர் இடையே வழித்தடத்தை மேம்படுத்த பொதுப் பணித் துறை திட்டமிட்டு வருகிறது. அரவிந்தோ சௌக் பகுதிக்கான பணிகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொள்ளும். மூன்றாவது திட்டமானது துவாரகாவின் செக்டார் 25-இல் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மூன்று சாலைத் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் தில்லி மும்பை தொழில் பாதை மேம்பாட்டு நிறுவனம் (டிஎம்ஐசிடி) மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai