Enable Javscript for better performance
அதிமுக எம்எல்ஏவுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக எம்எல்ஏவுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    By DIN  |   Published on : 16th January 2018 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் இன்பதுரையின் தேர்தல் வெற்றியை செல்லாது என உத்தரவிடக் கோரி,  அதே தொகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பில்  போட்டியிட்ட  அப்பாவு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற உள்ளது.
    கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது ராதாபுரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், "சுமார் 200-க்கும் மேற்பட்ட தபால் வாக்குகளை வேண்டுமென்றே நிராகரித்துள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையின் போது 19, 20,  21ஆவது சுற்றுகளில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஒருதலைப்பட்சமாக முடிவை அறிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முறையாக நடந்திருந்தால் நான்தான் வெற்றிபெற்றிருந்திருப்பேன்.  ஆகவே,  இன்பதுரை பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.  மேலும், தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-ஆவது சுற்று வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதாடுவதற்கான  நேர அளவு குறித்து அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு,  விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai