Enable Javscript for better performance
அன்புமணியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காத தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
    கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கவில்லை.  நீட் தேர்வை ரத்து செய்யாதது,   காவிரி வழக்கின் தீர்ப்பை அமல்படுத்தாதது உள்ளிட்ட விவகாரங்களால் குடியரசுத் தலைவர்  தேர்தலைப் புறக்கணிப்பதாக அவர் கூறியிருந்தார்.
     இந்நிலையில்,  தருமபுரி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்களின் விருப்பத்தைக் கேட்டு அறியாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்தது சட்டவிரோதமாகும். இதனால்,  அன்புணி ராமதாஸை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
    இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் ஆஜராகி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை புறக்கணிப்பது சட்டவிரோதமாகும்.  அவர் தேர்தல் புறக்கணிக்கும் முடிவை எடுக்கும் முன்பு தொகுதி மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்.  ஆனால், அவர் அதுபோன்று ஏதும் செய்யவில்லை. இதனால்,  அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.  அப்போது,   தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  "ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காவிட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என சட்டத்தில் கூறப்படவில்லை' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai