Enable Javscript for better performance
கோவிந்தபுரி கொலை, கொள்ளை வழக்கில் நான்கு பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி கோவிந்தபுரியில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நான்கு பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
    இதுகுறித்து காவல் துறையின் தென்கிழக்கு தில்லி மாவட்டத் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் செய்தியாளர்களிடம்திங்கள்கிழமை கூறியதாவது:
    கோவிந்தபுரியில் உள்ள மங்கி பார்க்கில் கடந்த சனிக்கிழமை மாலையில் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அவரை போலீஸார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
    ஆனால், அவர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் திரிலோக்புரி பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பதும், அவருடன் பெண் ஒருவர் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. 
    அவர்கள் இருவரும் மங்கி பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நான்கு பேர் கத்தியால் மிரட்டி பணம், நகைகளைப் பறிக்க முயன்றனர். அப்போது, நரேஷ் எதிர்ப்புத் தெரிவிக்கவே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரது மார்பில் கத்தியால் குத்தினார். அதன்பிறகு நகை, பணத்துடன் அங்கிருந்து நால்வரும் தப்பியோடிவிட்டனர்.
     இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் சரிதா விஹாரைச் சேர்ந்த சஞ்சய் (31), துக்ளகாபாத் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் (23), ராம் பாபு (21), சுரேந்தர் (31) ஆகியோர் இக்கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நால்வரையும் 24 மணி நேரத்தில் போலீஸ் படையினர் கைது செய்தனர். 
    இதில் சஞ்சய், சுரேந்தர் ஆகியோர் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. மேலும், 2014-இல் இதேபோன்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
    சுரேந்தருக்கு 10 திருட்டு, கொள்ளை வழக்குகளிலும், சஞ்சய்க்கு 8 கொள்ளை வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. பவன், ராம்பாபு ஆகிய இருவரும் முதல் முறையாக குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நால்வரிடம் இருந்தும் செல்லிடப்பேசி, மூக்குத்தி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டதாக காவல் உயரதிகாரி சின்மய் பிஸ்வால் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai