Enable Javscript for better performance
தில்லியில் ரூ.12 கோடி போதைப் பொருளுடன் 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ரூ.12 கோடி ஹெராயின் போதைப் பொருளுடன் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) சஞ்சீவ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
    தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு ஜனவரி 10-ஆம் தேதி ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில்,  உத்தர பிரதேச மாநிலம், சாஹரன்பூர் பகுதியைச் சேர்ந்த சாவேஜ் (20) என்பவர் தில்லியைச்  சேர்ந்த போதைப் பொருள் டீலரிடம் போதைப் பொருள் விநியோகம் செய்வதற்காக வருவதாகக் கூறப்பட்டது.
    இதையடுத்து,  சிறப்புப் பிரிவு போலீஸ் படையினர்  ஆனந்த் விஹார் பேருந்து பணிமனைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்துப் பணிமனைப் பகுதிக்கு இரவில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் 2 கிலோ தரமான ஹெராயின் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.  அவரிடம் நடத்திய விசாரணையின்போது ரியாஜ் என்பவரின் வலதுகரமாக செயல்படும் ஆசிக் அலி (33) என்பவர் போதைப் பொருளைக் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.  மேலும், இருவரிடமும் அதிக அளவில் போதைப் பொருள் இருப்பில் இருப்பதாகவும் இருவரும் உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் இருப்பதாகவும்  சாவேஜ் தெரிவித்தார்.  இதையடுத்து, ஆசிக் அலியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.  அவரிடமிருந்து சிம் கார்டுகள், செல்லிடப்பேசிகள், 1 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தில்லி, என்சிஆர்,  சஹரன்பூர், ஹரித்வார் பகுதிகளில் போதைப் பொருள் விநியோகத்தில் சாவேஜ்  ஈடுபட்டு வந்துள்ளார். 
    போதைப் பொருள் கடத்தலின் முக்கிய மூளையாக செயல்பட்டு வரும் ரியாஸ் உள்ளிட்டோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச மார்க்கெட் விலை ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல் உயர் அதிகாரி சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai