Enable Javscript for better performance
தொழிற்சாலையில் "ஓவன்' வெடித்து விபத்து: தொழிலாளர்கள் மூவர் கவலைக்கிடம்- Dinamani

சுடச்சுட

    

    தொழிற்சாலையில் "ஓவன்' வெடித்து விபத்து: தொழிலாளர்கள் மூவர் கவலைக்கிடம்

    By DIN  |   Published on : 16th January 2018 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அருகே சமய்பூர் பாத்லியில்  உள்ள தொழிற்சாலை ஒன்றில் "ஓவன்' வெடித்ததில் தொழிலாளர்கள் மூவர் பலத்த தீக்காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:  சமய்பூர் பாத்லியில் செயல்பட்டு வரும் அந்த ஆலையில் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர்.  
    அந்த ஆலையில் நிறுவப்பட்டுள்ள மெகா அடுப்புக்கு (ஓவன்)  மிக அருகாமையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அடுப்பு திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த விபத்து குறித்து ஆலையில் இருந்த மற்ற தொழிலாளர்கள் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். 
    தீயணைப்பு வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் ஆலைக்கு விரைந்தனர். அப்போது, இந்த விபத்தில் தீக்காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த தீக்காயமடைந்த பப்பு (80%), வினீத் (50%),  கைலாஷ் (40%) ஆகிய மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மற்றொரு தீ விபத்து:  தில்லி புறநகர்ப் பகுதியான நரேலாவில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து  தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:  
    நரேலாவில் உள்ள பிளாஸ்டி கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
    இதைத் தொடர்ந்து சுமார் 26 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கடுமையாகப் போராடி அதிகாலை 5 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai