Enable Javscript for better performance
"சர்வதேச தரத்தில் "என்டிஎம்சி' பள்ளிகள் மேம்படுத்தப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    "சர்வதேச தரத்தில் "என்டிஎம்சி' பள்ளிகள் மேம்படுத்தப்படும்'

    By DIN  |   Published on : 17th January 2018 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பள்ளிகள் மிக விரைவில் சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் என்று அதன் தலைவர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
    2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் தாக்கல் செய்து அவர் பேசியதாவது: 
    புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்குள்பட்ட கோல் மார்கெட் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிகள், லோதி காலனியில் உள்ள இரண்டு பள்ளிகள் என மொத்தம் 4 பள்ளிகள் முதல் கட்டமாக நவீனப்படுத்தப்படவுள்ளன. இப்பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். 
    மேலும், தற்போதுள்ள வகுப்பறைகள் வைஃபைவசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகளாக மாற்றப்படவுள்ளன. இங்கு டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுக்கான அதி நவீன சமையல் கூடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த சமையல் கூடங்களில் மாணவர்களுக்காக சுகாதாரமான உணவு சமைக்கப்படும். இதன் மூலம், சுமார்3,000 மாணவர்கள் பயன்பெறுவர்.
    மாணவர் பரிமாற்றத் திட்டம்: கடந்த ஆண்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆறு மாணவர்கள் பெல்ஜியம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று அந்நாட்டின் கல்வி முறை தொடர்பாக அறிந்து வந்தனர். அதேபோல, இந்த ஆண்டு வட கிழக்கு மாநிலங்களுக்கு மாணவர்கள் அனுப்பப்படவுள்ளனர். அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வரவுள்ளனர். 
    இலவச கால்பந்துப் பயிற்சி: புது தில்லி முனிசிபல் கவுன்சில் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச கால்பந்துப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் சேர்ந்த 30 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கால்பந்து நிபுணர்களின் உதவியுடன் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
    மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட்:மாணவர்களுக்கு ரேடியோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டுகள், மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பெற்றோருக்கு குறுந்தகவல்களை அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்களின் வருகையும் பதிவு செய்யப்படும். 
    நடமாடும் வகுப்பறைகள்: கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் நடமாடும் வகுப்பறை வேன்கள் அமைக்கப்படவுள்ளன. தில்லி முனிசிபல் கவுன்சிலுக்குள்பட்ட சரோஜினி நகர், நௌரோஜி நகர், நேதாஜி நகர் ஆகிய இடங்களில் அதிகளவு கட்டட வேலைகள் நடைபெறுகின்றன. இப்பகுதிகளில் அதிகளவு கட்டடத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். 
    இக் கட்டடத் தொழிலாளர்கள் அடிக்கடி இடம் மாறுவதால் இவர்களின் குழந்தைகளால் நிலையானதொரு பள்ளியில் கல்வி கற்க முடிவதில்லை. எனவே, இக்குழந்தைகளுக்காக பிரத்யேகமாக நடமாடும் வகுப்பறை வேன்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த வேன்களில் சிறிய அளவிலான நூலகமும் அமைக்கப்படும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai