Enable Javscript for better performance
தண்டனையை ரத்து செய்யக் கோரிய லாரி ஓட்டுநரின் மனு நிராகரிப்பு- Dinamani

சுடச்சுட

  

  தண்டனையை ரத்து செய்யக் கோரிய லாரி ஓட்டுநரின் மனு நிராகரிப்பு

  By DIN  |   Published on : 17th January 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை விபத்து வழக்கில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விதித்த நான்கு மாத கடுங்காவல் சிறைத் தண்டனையை ரத்துக் செய்யக் கோரி லாரி ஓட்டுநர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம்நிராகரித்தது.
  தில்லியைச்சேர்ந்தவர் சஷி பூஷண். இவர் 2006, செப்டம்பர் 11-ஆம் தேதி தில்லி ஓக்லா பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்தை நேரில் கண்ட நபர், காயமடைந்த சஷி பூஷணை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனயில் சேர்த்தார். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
  லாரியை அதன் ஓட்டுநர் அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி வந்ததேஇந்த விபத்துக்கு காரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 2017, ஏப்ரல் 2017ஆம் தேதி தீர்ப்புக் கூறப்பட்டது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட லாரி ஓட்டுநருக்கு நான்கு மாத கடுங்காவல் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர் ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
  இத்தீர்ப்பை எதிர்த்து தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் லாரி ஓட்டுரின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்த வழக்கில் விபத்தை நான்தான் ஏற்படுத்தினேன் என்பதற்கான ஆதாரத்தை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. போதிய சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' முறையிடப்பட்டது.
  இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. குப்தா பிறப்பித்த உத்தரவு வருமாறு: 
  இந்த வழக்கில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறைபாடு இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற சிறைத் தண்டனைகள் அளிக்கப்படுவதன் மூலம்தான் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவோரின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.  இந்த வழக்கின் விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வணிக வாகனத்தை ஓட்டியவர், விபத்தில் சிக்கியநபரை மருத்துவமனைக்குக்கூட கொண்டு செல்லவில்லை. சாலை விபத்து வழக்குகளில் குற்றங்களைத் தடுக்கக் கூடிய வகையில் தண்டனைகள் அளிக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். 
  அப்போதுதான், சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள், விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு நிகழும் போது கடுமையான தண்டனைக்கு தாங்கள் உள்பட நேரிடும் என்ற எண்ணம் மனத்தில் உருவாகும். இந்த வழக்கில் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகிய இரண்டும் மனுதாரர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளாக உள்ளன. இதனால், மனுதாரருக்கு கருணை காட்ட முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai