Enable Javscript for better performance
தில்லி பேரவையில் இருந்து மிஸ்ரா, பாஜக எம்எல்ஏ வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பேரவையில் இருந்து மிஸ்ரா, பாஜக எம்எல்ஏ வெளியேற்றம்

    By DIN  |   Published on : 17th January 2018 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட கபில் மிஸ்ராவும், பாஜக உறுப்பினர் மஜிந்தர் சிங் சிர்சாவும் தில்லி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
    தில்லி சட்டப்பேரவை செவ்வாயக்கிழமை கூடியதும், கபில் மிஸ்ரா அவையில் பதாகையை ஏந்தி நின்றார். அதில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் சாப்பில் அண்மையில் மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுஷில் குப்தா ஆகியோர் தொடர்பான கேலி சித்திரம் இடம் பெற்றிருந்தது.
    கபில் மிஸ்ராவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவைத் தலைவர் ராம் நியாஸ் கோயல், அவையில் இருந்து மிஸ்ராவை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    அப்போது, பாஜக உறுப்பினர் மஜிந்தர் சிங் சிர்சா திடீரென கபில் மிஸ்ராவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரை அவையில் இருந்து வெளியேற்றவிடாமல் தடுத்தார்.
    இதையடுத்து, மஜிந்தர் சிங் சிர்சாவையும் அவையில் இருந்து வெளியேற்றும்படி, அவைக் காவலர்களுக்கு அவைத் தலைவர் ராம் நியாஸ் கோயல் உத்தரவிட்டார். 
    இதையடுத்து, அவைக் காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்த மஜிந்தர் சிங் சிர்சாவின் விவகாரத்தை அவையின் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாகவும் கோயல் தெரிவித்தார்.
    இதையடுத்து, பேரவை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஜிந்தர் சிங் சிர்சா, தான் அவைக் காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்க வில்லை என்றும் கபில் மிஸ்ராவை அவையில் இருந்து வெளியேறுமாறு கனிவுடன் கேட்டுக் கொண்டேன் என்றும் தெரிவித்தார்.
    இதைப்போல் பேரவை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கபில் மிஸ்ரா, "ஆம் ஆத்மி கட்சி தனது மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை விலைக்கு விற்றுள்ளது. இதுகுறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தினேன்' என்றார்.
    தில்லி சட்டப்பேரவையின் மூன்று நாள் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில், வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சிகளின் சீல் வைப்பு பிரச்னையை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. 
    இதனால், அவை இரண்டு மணி நேரத்தில் நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் இருவர் வெளியேற்றப்பட்டனர்.

    ராம் நியாஸ் கோயல் கண்டனம்
    தில்லி சட்டப்பேரவையில் அவைக் காவலர்களாக உள்ள தில்லி போலீஸார், கபில் மிஸ்ராவை வெளியேற்றும்போது தாக்கிவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக உறுப்பினருமான விஜேந்தர் குப்தா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவைத் தலைவர் ராம் நியாஸ் கோயல் கண்டனம் தெரிவித்தார்.
    இதுகுறித்து கோயல் மேலும் கூறுகையில், "கபில் மிஸ்ராவை தில்லி போலீஸார் தாக்கிவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவின் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது. 
    இந்த விவகாரத்தை தில்லி போலீஸார் அவையில் கவனத்துடன் கையாண்டதற்கு பாராட்டுகிறேன். விஜேந்தர் குப்தாவின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai