Enable Javscript for better performance
தேர்தல் வழக்கு: அப்பாவு மனு மீதான விசாரணை பிப்.1-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் வழக்கு: அப்பாவு மனு மீதான விசாரணை பிப்.1-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 17th January 2018 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் இன்பதுரையின் தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிடக் கோரி, திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
    கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது ராதாபுரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், "சுமார் 200-க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஒருதலைப்பட்சமாக முடிவை அறிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முறையாக நடந்திருந்தால் நான்தான் வெற்றி பெற்றிருப்பேன். எனவே, இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், தபால் வாக்குகளையும், 19, 20, 21-ஆவது சுற்று வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிஅமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai