Enable Javscript for better performance
சட்டப்பேரவையிலிருந்து  கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவையிலிருந்து  கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றம்  

    By DIN  |   Published on : 18th January 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி சட்டப்பேரவையில் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதம் நடத்த கோரிய ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் கபில் மிஸ்ரா வெளியேற்றப்பட்டார்.
    தில்லி சட்டப்பேரவையின் 3-ஆவது நாள் கூட்டத் தொடர் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும், பேரவைத்  தலைவர் ராம் நிவாஸ் கோயல் அலுவலை அறிவிக்கத் தொடங்கினார்.  அதே சமயம், அலுவலைத் தவிர்த்து பிற உறுப்பினர்களுக்கு விவாதங்களை எழுப்ப அனுமதி இல்லை என்றார். 
    கபில் மிஸ்ரா வெளியேற்றம்: இதைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் கபில் மிஸ்ரா வலியுறுத்தினார். இதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதையடுத்து, கபில் மிஸ்ரா, கோரிக்கை அடங்கிய பேனரை அணிந்து கொண்டும்,   வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டும் அவையின் மையப் பகுதிக்கு வந்து பேரவைத் தலைவரிடம் முறையிட முயன்றார். இதற்கு பேரவைத் தலைவர் ஆட்சேபம் தெரிவித்தார்.  மேலும், அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட முயன்ற கபில் மிஸ்ராவை வெளியேற்றுமாறு அவையின் காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கபில் மிஸ்ரா அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
    பாஜக வெளிநடப்பு: இதேபோல,  தலைநகர் தில்லியில் குளிர் காலத்தில் வீடற்றோர் உயிரிழந்தது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையையும் பேரவைத் தலைவர் நிராகரித்தார்.  அப்போது ஆளும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கும், பாஜக உறுப்பினர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டது.   இதையடுத்து,  தங்களது கோரிக்கைகளை எழுப்ப அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
     சிக்னேச்சர் மேம்பாலம்: பின்னர்  கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  
    வட மேற்கு தில்லியில் எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சிக்னேச்சர் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். மேம்பாலப் பணிக்கு தில்லி அரசின் நிதி தொடர்ந்து கிடைத்து வருவதாகவும்,  இதனால், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் சிக்னேச்சர் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சிக்னேச்சர் மேம்பாலப் பணிக்கான நிதியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வருக்கும், பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளேன்.  முதல்வர் கேஜரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,   சிக்னேச்சர் மேம்பாலத்துக்கான பெயர் இந்த மண் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளேன். ஜாட், குஜ்ஜர் சமூகங்களை தில்லி அரசு புறக்கணித்து வருகிறது. எனவே, சிக்னேச்சர் மேம்பாலத்துக்கு குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த  அரசர்  "மிகிர் போஜ் சேது'  என்ற பெயரை சூட்ட  வேண்டும் என வலியுறுத்திள்ளேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai