Enable Javscript for better performance
"சீல்' நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது: டிஃபன்ஸ் காலனி வணிகர்கள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    "சீல்' நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது: டிஃபன்ஸ் காலனி வணிகர்கள் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 18th January 2018 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிஃபன்ஸ் காலனியில் நடைபெற்றுவரும் வணிக வளாகங்கள் சீல் வைப்பு நடவடிக்கை உள்நோக்கம்  கொண்டது என்று வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    தில்லியில் எத்தனையோ வணிக வளாகங்கள் சட்டத்துக்குப்புறம்பான வகையில் அமைக்கப்பட்டு செயல்படும் போது,  டிஃபன்ஸ் காலனி வணிக வளாகங்களை மட்டும் குறிவைத்து  நடவடிக்கைகளை முடக்கிவிட்டிருப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    டிஃபன்ஸ் காலனியில் 51 வணிக வளாகங்கள்  உருமாற்றக் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இவை அனைத்துமே முதல் தளத்தில் அமைந்துள்ளவை. 
    உருமாற்றக் கட்டணமாக சதுர அடிக்கு ரூ.89,000 செலுத்துமாறு கண்காணிப்புக் குழு முதலில் நிர்ணயித்தது. பிறகு, இந்தத் தொகை ரூ. 22,274 ஆகக் குறைக்கப்பட்டது.  இந்நிலையில், செவ்வாய்கிழமை டிஃபன்ஸ் காலனியில் தரைத்தளத்தில் இருந்த 35 வணிக வளாகங்கள் கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. 
     "டிஃபன்ஸ் காலனியில் தரைத் தளத்தில் வணிக வளாகங்களை சட்டப்படி நடத்த முடியாது. எனவே, தரைத் தளங்களில் உள்ள வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டன' என்று கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
    இதே கருத்தை  தெற்கு தில்லி மாநகராட்சி அவைத் தலைவர் ஷிக்கா ராயும் தெரிவித்தார்.  அவர் கூறுகையில், "தெற்கு தில்லி  மாநகராட்சியின் 2021- மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி தரைத் தளங்களில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.  இத்திட்டத்தின்படி டிஃபன்ஸ் காலனியில் தரைத் தளங்களை பொருள்களை சேமிக்கவும், அலுவலகங்களை  நடத்தவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். தரைத் தளங்களில் வணிக வளாகங்களை நடத்தக் கூடியளவுக்கு பாதுகாப்பு வசதிகள் இல்லை' என்றார்.
    இந்நிலையில், உருமாற்றக் கட்டணத்தை சரியாகச் செலுத்திய பிறகும் தங்களுடைய வணிக வளாகங்களை உள்நோக்கத்துடன்  மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகவும்,  இதற்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாக சந்தேகிப்பதாகவும் டிஃபன்ஸ் காலனி வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். 
    இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ராஜேந்தர் மாலிக் கூறியதாவது:
    டிசம்பர் மாதம் 21- ஆம் தேதி உருமாற்றக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி வணிக வளாகங்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாங்கள் உடனடியாக உருமாற்றக் கட்டணத்தைச் செலுத்தினோம். இப்போது  உருமாற்றக் கட்டணம் செலுத்தினாலும் தரைத் தளங்களை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்று புதிய விளக்கத்தைக் கண்காணிப்புக் குழுவினரும் மாநகராட்சி அதிகாரிகளும் சொல்கின்றனர். தில்லியில் எத்தனையோ இடங்களில் உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிக வளாகங்கள் எவ்விதத் தடங்கல்களும் இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
    ஆனால், டிஃபன்ஸ் காலனியில் உள்ள வணிக வளாகங்கள் மட்டும் அடுத்தடுத்து புதுப்புதுக் காரணங்களைக் கூறி சீல் வைக்கப்படுவது ஏன்?  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீல் வைப்பு நடவடிக்கைக்குத் தீர்வு காண்பதற்கான உதவிகளைச் செய்யத் தயாராகவுள்ளதாக கூறிய தினத்தில் இந்த வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டு கண்காணிப்புக்குழு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். ஆனால்,அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டனர். 
    டிஃபன்ஸ் காலனியில் உள்ள வணிக வளாகங்களில் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். டிசம்பர் 21- ஆம் தேதி வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்ட போது இவர்களில் பலர் பாதிக்கப்பட்டனர்.  இவர்களில் பலர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை நடைபெற்ற சீல் வைப்பு நடவடிக்கையால் எஞ்சிய தொழிலாளர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது  என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai