Enable Javscript for better performance
மனைவி, குழந்தை மர்மச் சாவு: தலைமறைவான கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வடமேற்கு தில்லியில் வீட்டில் இளம் பெண்ணும், அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், தலைமறைவான பெண்ணின் கணவரை 24 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இருவரையும் அவர் கொலை செய்தது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையின் வடமேற்கு சரக துணை ஆணையர் அஸ்லம் கான் கூறியதாவது:
    வடமேற்கு தில்லி, ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோபா (எ) சோனு (33). இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் கரன் (எ) பாபு என்ற குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஓம்பிரகாஷும் , இவரது தம்பி குடும்பமும் ஒரே வீட்டில் இரு தளங்களில் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.
    இந்நிலையில், திங்கள்கிழமை இரவு உணவருந்திய ஓம்பிரகாஷ் குடும்பத்தினர் பின்னர் முதல் தளத்திற்கு தூங்கச் சென்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சோபாவும், கரனும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது, சோபாவின் கணவர் அங்கிருந்து தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. அவர் இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
    இதையடுத்து, அவரைப் பிடிக்க ஜஹாங்கிர்புரி பகுதி காவல் உதவி ஆணையர் ராகேஷ் தியாகி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்படையினர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓம்பிரகாஷை தேடினர். இந்நிலையில், கேரா காலன் ரயில் நிலையப் பகுதியில் ஓம்பிரகாஷ் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
    தனது மனைவியையும், மகனையும் ஒம்பிரகாஷ் கொலை செய்துவிட்டு, படுக்கையிலேயே இரவு முழுவதும் தூங்கியதும் பின்னர் அதிகாலையில் வீட்டில் இருந்து தலைமறைவானதும் விசாரணையில் தெரியவந்தது. 
    அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல் துறை உயரதிகாரி அஸ்லம் கான் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai